100 அடி சாலை மேம்பாலத்தில் 'பேட்ஜ் ஒர்க்' பணி


100 அடி சாலை மேம்பாலத்தில் பேட்ஜ் ஒர்க் பணி
x

'தினத்தந்தி' செய்தி எதிரொலியால் புதுவை 100 அடி சாலை மேம்பாலத்தில் சேதமான இடங்களில் ‘பேட்ஜ் ஒர்க்’ பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.

புதுச்சேரி

புதுச்சேரி 100 அடி சாலையில் ரெயில்வே கிராசிங் உள்ளது. இங்கு ரெயில்வே கேட் மூடப்படும்போது அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதை கருத்தில் கொண்டு அங்கு மத்திய, மாநில அரசு களின் உதவியுடன் ரூ.35 கோடியே 72 லட்சம் செலவில் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு கடந்த 2017-ம் ஆண்டு திறக்கப்பட்டது. சென்னையில் இருந்து புதுச்சேரி வழியாக கடலூர் செல்லும் வாகனங்கள் இந்த வழியாக தான் சென்று வருகின்றன.

இந்த பாலத்தின் மேல் பகுதியில் சிமெண்டு சாலை அடிக்கடி சேதமாகி பள்ளங்கள் ஏற்படுவதும், அவை சீரமைக்கப்படுவதும் வாடிக்கையாக உள்ளது.

'பேட்ஜ் ஒர்க்'

இந்த நிலையில் புதுவையில் கடந்த மாதம் பெய்த மழையால் பாலத்தின் மையப்பகுதியில் சிமெண்டு கான்கிரீட் பெயர்ந்து பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதில் இரும்பு கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டு இருந்தன. இதனால் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனே பயணம் செய்து வந்தனர்.

இது தொடர்பாக 'தினத்தந்தி' நாளிதழில் கடந்த 20-ந் தேதி படத்துடன், செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இன்று மேம்பாலத்தில் இருந்த பள்ளங்களை கான்கிரீட் கலவை கொண்டு பேட்ஜ் ஒர்க் செய்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தற்போது மேம்பாலம் பள்ளம் இன்றி சீரானது. வாகன ஓட்டிகள் எவ்வித அச்சமின்றி மேம்பாலத்தில் பயணம் செய்து வருகின்றனர்.


Next Story