1,000 கி.மீ. தூரத்துக்கு பாய்மர படகில் பயணிக்கும் தமிழக பெண் போலீசார்


1,000 கி.மீ. தூரத்துக்கு பாய்மர படகில் பயணிக்கும் தமிழக பெண் போலீசார்
x
தினத்தந்தி 16 Jun 2023 3:40 PM GMT (Updated: 16 Jun 2023 6:31 PM GMT)

1,000 கி.மீ. தூரம் பாய்மர படகில் பயணம் செய்யும் தமிழக பெண் போலீசார் இன்று புதுச்சேரி வந்தனர். அவர்களுக்கு புதுவை மாநில காவல்துறை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

புதுச்சேரி

1,000 கி.மீ. தூரம் பாய்மர படகில் பயணம் செய்யும் தமிழக பெண் போலீசார் இன்று புதுச்சேரி வந்தனர். அவர்களுக்கு புதுவை மாநில காவல்துறை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பெண் போலீசார்

தமிழ்நாடு போலீஸ் துறையில் பெண் போலீசார் கால் தடம் பதித்து 50 ஆண்டுகள் நிறைவு அடைந்ததையொட்டி பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அதையொட்டி பெண் போலீசாரின் திறமைகளை பறைசாற்றும் வகையில் பல்வேறு போட்டிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் சென்னையில் இருந்து பாய்மர படகு மூலம் புறப்பட்டு பழவேற்காடு வழியாக கோடியக்கரை வரை சென்றுவிட்டு மீண்டும் சென்னைக்கு திரும்பும் பயண நிகழ்ச்சி சென்னை துறைமுகத்தில் கடந்த 10-ந்தேதி தொடங்கியது. 1,000 கி.மீ. தொலைவிலான இந்த பயணத்தை 4 பாய்மர படகுகளில் 30 பெண் போலீசார் மேற்கொண்டனர்.

வரவேற்பு

இந்த பாய்மர படகு பயணத்தில் பெண் போலீஸ் உயரதிகாரிகளான கூடுதல் டி.ஜி.பி. பாலநாகதேவி, ஐ.ஜி.க்கள் மகேஸ்வரி, பவானீஸ்வரி, டி.ஐ.ஜி. கயல்வழி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர் கோடியக்கரை சென்று விட்டு மீண்டும் சென்னை திரும்பினர்.

இந்த நிலையில் இன்று காலை புதுச்சேரி தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்திற்கு வந்தனர். அவர்களை புதுச்சேரி மாநில காவல் துறை சார்பில் கடலோரக்காவல் போலீஸ் சூப்பிரண்டு பழனிவேல் மற்றும் போலீசார் வரவேற்றனர். பின்னர் அந்த குழுவினர் இங்கிருந்து மீண்டும் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். இந்த குழுவினர் நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) சென்னை துறைமுகம் சென்றடைகின்றனர்.


Next Story