புதுச்சேரியில் 106 டிகிரி வெயில்

புதுச்சேரியில் 106 டிகிரி வெயில் கொளுத்தியது. கடும் வெயிலால் வெளியில் தலைகாட்ட முடியாமல் மக்கள் தவித்தனர்.
புதுச்சேரி
புதுச்சேரியில் 106 டிகிரி வெயில் கொளுத்தியது. கடும் வெயிலால் வெளியில் தலைகாட்ட முடியாமல் மக்கள் தவித்தனர்.
அனல் காற்று
அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந்தேதி மழையுடன் தொடங்கியது. எனவே தொடர்ந்து மழையுடன் கத்திரி வெயில் அடங்கி விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 'மோக்கா' புயல் காரணமாக வெயில் தாக்கம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. அதன்படி கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.
நாள்தோறும் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வந்தது. இந்த நிலையில் இன்று அதிகபட்சமாக 106.16 டிகிரி வெயில் பதிவானது. இந்த ஆண்டு பதிவான மிக அதிகமான வெப்பம் இதுவாகும். கடும் வெயில் கொளுத்தியதால் பொதுமக்களால் வெளியில் தலைகாட்ட முடியவில்லை. பகல் நேரத்தில் அனல் காற்றும் வீசியது. சாலைகளில் கானல்நீர் தென்பட்டது.
வீட்டிற்குள் முடங்கினர்
தற்போது பள்ளி கோடை விடுமுறை விடப்பட்டு இருந்த நிலையில் கடும் வெயில் காரணமாக மாணவர்களும் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்தனர்.
இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. வெளியில் சென்றவர்களும் குடை, தொப்பி போன்றவற்றை அணிந்து சென்றனர். இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் குளிர்விக்கும் கண் கண்ணாடி அணிந்து சென்றதை காணமுடிந்தது. அதேபோல் வெயிலுக்கு இதமான குளிர்பானங்களின் விற்பனையும் சூடுபிடித்துள்ளது. நுங்கு, வெள்ளரிக்காய், தர்பூசணி, ஐஸ்கிரீம், இளநீர் போன்ற குளிர்ச்சி தரும் பானங்களை பொதுமக்கள் விரும்பி வாங்கி சாப்பிட்டனர்.