டெங்கு காய்ச்சலுக்கு என்ஜினீயரிங் கல்லூரி மாணவி உள்பட 2 பேர் பலி


டெங்கு காய்ச்சலுக்கு என்ஜினீயரிங் கல்லூரி மாணவி உள்பட 2 பேர் பலி
x

புதுவையில் டெங்கு காய்ச்சலுக்கு என்ஜினீயரிங் கல்லூரி மாணவி உள்பட 2 பேர் உயிரிழந்தனர். கடந்த 2 நாட்களில் மட்டும் 37 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி

புதுவையில் டெங்கு காய்ச்சலுக்கு என்ஜினீயரிங் கல்லூரி மாணவி உள்பட 2 பேர் உயிரிழந்தனர். கடந்த 2 நாட்களில் மட்டும் 37 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வேகமாக பரவும் டெங்கு

புதுவை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் இயங்கும் தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு திட்டம் மூலம் மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா, ஜப்பானிய மூளைக்காய்ச்சல் மற்றும் யானைக்கால் நோய் போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பருவமழை தொடங்கும் முன்பே டெங்கு, மலேரியா போன்றவை வேகமாக பரவி வருகிறது.

புதுவை மாநிலத்தில் இந்த ஆண்டு இதுவரை டெங்குவால் 1,175 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டை விட இது அதிகம் ஆகும். எனவே, இதனை தடுக்க சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவி உள்பட 2 பேர் பலி

இந்தநிலையில் தருமாபுரி பகுதியை சேர்ந்த மீனா ரோஷினி (வயது 28) என்பவர் கடந்த 4-ந் தேதி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். எனவே அவர் புதுவை தட்டாஞ்சாவடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் குணமடைந்து வீடு திரும்பினார். இதற்கிடையே காய்ச்சலின் பாதிப்பு தீவிரமானது.

இதனால் மீனா ரோஷினி மீண்டும் கடந்த 6-ந் தேதி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

குருமாம்பேட் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் காயத்ரி (19). இவர் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதற்காக அவர் புதுவை மூலக்குளம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி காயத்ரி பரிதாபமாக உயிரிழந்தார்.

37 பேர் அனுமதி

டெங்குவால் கடந்த 2 நாட்களில் 2 பெண்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.

புதுச்சேரியில் கடந்த 2 நாட்களில் மட்டும் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் டெங்குவால் பாதித்து 37 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு கூறுகையில், 'புதுவையில் டெங்கு பாதிப்பால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே மேட்டுப்பாளையம், குரும்பாபேட் பகுதியில் மருத்துவ குழுவினர் மூலம் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். யாருக்காவது காய்ச்சல், டெங்கு அறிகுறி இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வர வேண்டும். அங்கு பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான படுக்கை வசதிகள் மற்றும் மருந்துகள் கையிருப்பு உள்ளது. டெங்கு காய்ச்சல் உருவாக்கும் வைரசுக்கு தனி சிகிச்சை ஏதும் கிடையாது. டெங்கு காய்ச்சலில் இருந்து விடுபட்ட பிறகு இயல்பு நிலை திரும்பி விடும் என்ற பொய்யான தோற்றத்தை உருவாக்குவதாலும் காலதாமத சிகிச்சையாலும் உயிர்ப்பலி ஏற்படுகிறது. அரசு மருத்துவமனையில் இதற்கு முழுமையான சிகிச்சை அளிக்கப்படுகிறது' என்றார்.


Next Story