மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் கைது

புதுவையில் போலீசாரின் வாகன சோதனையின்போது மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி
போலீசாரின் வாகன சோதனையின்போது மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மோட்டார் சைக்கிள் திருட்டு
உருளையன்பேட்டை ராஜா நகரை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 24). இவர் டாடூ சென்டர் (பச்சை குத்துதல்) நடத்தி வருகிறார். சம்பதவ்தன்று இவர், தனது மோட்டார்சைக்கிளை கிருஷ்ணாநகரில் உள்ள அண்ணன் வீட்டு முன்பு நிறுத்திவிட்டு தூங்கியுள்ளார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது மோட்டார்சைக்கிளை காணவில்லை. யாரோ மர்ம ஆசாமிகள் திருடி சென்றுள்ளனர்.
இதுதொடர்பான புகாரின்பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் சப்-இன்ஸ்பெக்டர் அன்சர்பாஷா மற்றும் போலீசார் சிவாஜி சிலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரை மடக்கி பிடித்து விசாரித்தபோது அவர்கள் தான் பிரேம்குமாரின் மோட்டார்சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது.
2 பேர் கைது
அவர்கள் புதுவை லாஸ்பேட்டை நரிக்குறவர் காலனியை சேர்ந்த ஏழுமலை (19), திண்டிவனம் நத்தமேடு நரிக்குறவர் காலனியை சேர்ந்த தனுஷ் (18) என்பதும் தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 4 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர்களது கூட்டாளியான சென்னை பூந்தமல்லியை சேர்ந்த கார்த்தி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.






