மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் படுகாயம்


மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் படுகாயம்
x

திருபுவனை அருகே உள்ள நல்லூரில் அறுந்து கிடந்த மின்கம்பியில் மோட்டார் சைக்கிள் ஏறியதால் மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருபுவனை

அறுந்து கிடந்த மின்கம்பியில் மோட்டார் சைக்கிள் ஏறியதால் மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

அறுந்து கிடந்த மின்கம்பி

திருபுவனை அருகே உள்ள நல்லூர் புதுநகர் பகுதியை சேர்ந்தவர் அருள்மணி மகன் சிவபாலன் (வயது 19). மதகடிப்பட்டில் உள்ள தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் டிப்ளமோ 2-ம் ஆண்டு படித்து வருகிறார். அதே பகுதியில் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுமன் (20). மதகடிப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (20).

இவர்கள் 3 பேரும் நேற்று இரவு நேலியனூர் பகுதியில் நடந்த கோவில் கும்பாபிஷேக தெருகூத்து நிகழ்ச்சியை பார்க்க சென்றனர். பின்னர் நேற்று அதிகாலை அவர்கள் 2 மோட்டார் சைக்கிள்களில் மதகடிப்பட்டு பாளையம் வழியாக நல்லூர் சாலையை கடக்க முயன்றனர்.

3 பேர் படுகாயம்

அப்போது அங்கு உயர் அழுத்த மின்கம்பி சாலையின் குறுக்காக அறுந்து கிடந்தது. இதை பார்த்த அவர்கள் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி விட்டு நின்று கொண்டிருந்தனர். அப்போது பள்ளிச்சேரியை சேர்ந்த ஏழுமலை (48) என்பவர் மின்கம்பி அறுந்து கிடப்பது தெரியாமல் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றார்.

அப்போது மின்கம்பி வேகமாக சுழன்று நின்று கொண்டிருந்த 3 பேர் மீதும் பட்டது. இதனால் மின்சாரம் தாக்கியதில் 3 பேரும் சுருண்டு விழுந்தனர். அந்த வழியாக வந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கலிதீர்த்தாள்குப்பத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் சிவபாலன், சுமன் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து திருபுவனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின் துறை ஊழியர்கள், மின்இணைப்பை துண்டித்து விட்டு மின்கம்பிகளை மாற்றி அமைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story