சிறுவன் உள்பட 3 பேர் கைது

உடற்பயிற்சி கூடத்தில் காலணிகள் திருடியதாக கைது செய்யப்பட்ட 2 பேரை (முகமூடி அணிந்திருப்பவர்கள்) படத்தில் காணலாம்.
உடற்பயிற்சி கூடத்தில் காலணிகள் திருடியதாக சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி
புதுச்சேரி கருவடிக்குப்பம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் அங்காளப்பன் (வயது 37). இவர் செட்டித்தெருவில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறார். தினமும் அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணிக்கு உடற்பயிற்சி கூடம் செயல்படும். சம்பவத்தன்று வழக்கம்போல் இரவு உடற்பயிற்சி கூடத்தை பூட்டிவிட்டு அங்காளப்பன் வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது, உடற்பயிற்சி கூடத்தின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு வைத்திருந்த ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள விலை உயர்ந்த புதிய ஷூக்கள் (காலணிகள்) மாயமாகி இருந்தது.
இதுகுறித்து பெரியகடை போலீசில் அங்காளப்பன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உடற்பயிற்சி கூடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.
விசாரணையில் உடற்பயிற்சி கூடத்தில் புகுந்து திருடியது விழுப்புரம் வளவனூரை சேர்ந்த முகுந்தன் (21), அபிஷேக் (23) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து காலணிகளையும், திருட்டுக்கு பயன்படுத்திய ஒரு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.






