ரவுடி கொலையில் 5 பேர் அதிரடி கைது


ரவுடி கொலையில் 5 பேர் அதிரடி கைது
x

புதுவையில் பிறந்த நாளன்று ரவுடி கொலையான சம்பவத்தில் 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து துருவி துருவி விசாரித்து வருகின்றனர்.

நெட்டப்பாக்கம்

புதுவையில் பிறந்த நாளன்று ரவுடி கொலையான சம்பவத்தில் 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து துருவி துருவி விசாரித்து வருகின்றனர்.

ஓடஓட விரட்டி வெட்டு

புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் மணிமாறன் என்ற டூம் மணி (வயது 32). ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. கடந்த 2020-ம் ஆண்டு நடந்த முத்தியால்பேட்டை சேர்ந்த பிரபல ரவுடி அன்பு ரஜினி கொலையில் கைதாகி சிறையில் இருந்த மணிமாறன், சில மாதங்களுக்கு முன்பு வெளியே வந்தார்.

இதையடுத்து எதிரிகளால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என கருதி பாதுகாப்பு தேடி மடுகரை பகுதியில் உள்ள தனது நண்பர் ஜெகன் வீட்டில் தஞ்சம் அடைந்தார். அங்கிருந்தபடி கரும்பு வெட்டுவது உள்பட கூலி வேலைக்கு சென்று வந்தார்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை அவர் இயற்கை உபாதை கழிக்க அங்குள்ள காலிமனைக்கு நடந்து சென்றார். அப்போது காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை ஓடஓட விரட்டி சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது.

3 தனிப்படைகள் அமைப்பு

இதுகுறித்து நெட்டப் பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது முத்தியால்பேட்டை அன்பு ரஜினி கொலைக்கு பழிக்குப்பழியாக மணிமாறன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. புதுவையில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்த தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டனர். கொலை நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். மேலும் கார் பதிவெண், குற்றவாளிகளின் செல்போன் எண்களை வைத்து துப்பு துலக்கி வருகின்றனர்.

கூலிப்படையா?

இதில் விழுப்புரம் மாவட்டம் தீவனூர் அருகே கொலை குற்றவாளிகள் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் விரைந்து சென்று அங்கு பதுங்கியிருந்த சிவராஜ், வினோதன், தர்மா, விஸ்டம், சங்கர் ஆகிய 5 பேரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

பின்னர் அவர்களை நெட்டப்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மணிமாறன் கொலை செய்யப்பட்டது ஏன்? இந்த சம்பவத்துக்கு பின்னணியாக இருப்பவர்கள் யார்? பிடிபட்டவர்கள் கூலிப்படையா? என்பது குறித்து துருவி துருவி போலீசார் விசாரித்து வருகிறார்கள். ரவுடிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் நடந்த இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்த போலீசாருக்கு மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வம்சீதரரெட்டி பாராட்டினார்.


Next Story