ரூ.700 கோடியில் குழாய் மூலம் வீடுகளுக்கு கியாஸ் இணைப்பு


ரூ.700 கோடியில் குழாய் மூலம் வீடுகளுக்கு கியாஸ் இணைப்பு
x

புதுச்சேரி மாநிலத்தில் ரூ.700 கோடியில் குழாய் மூலம் வீடுகளுக்கு கியாஸ் இணைப்பு வழங்குவது தொடர்பாக வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

புதுச்சேரி

புதுச்சேரி மாநிலத்தில் ரூ.700 கோடியில் குழாய் மூலம் வீடுகளுக்கு கியாஸ் இணைப்பு வழங்குவது தொடர்பாக வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

வரைவு அறிக்கை

வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டம் வெளிநாடுகள் மட்டுமின்றி மும்பை, டெல்லி மற்றும் தமிழகத்தில் நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் செயல்பாட்டில் உள்ளது. அதன்படி புதுச்சேரி மாநிலத்திலும் வீடுகளுக்கு குழாய் மூலமாக கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டம் தொடங்கப்பட ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் புதுவை அரசு தொழில் மற்றும் வணிகத்துறை புதுவை நகர எரிவாயு வினியோக கொள்கை-2023 திட்டத்தின்கீழ் வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் கியாஸ் இணைப்புக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ரூ.700 கோடியில் திட்டம்

இதில், புதுச்சேரி மாநிலத்தில் புதுவை, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் ரூ.700 கோடியில் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் வீடுகள், வணிக பயன்பாடு, தொழில்கள் மற்றும் போக்குவரத்துக்கும் கியாஸ் பயன்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்காக புதுவை அரசின் தலைமை செயலர் தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் தொழில் மற்றும் வணிகத்துறை, உள்ளாட்சி, பொதுப்பணி, மின்துறை, தொழில்நுட்பம், அறிவியல் தொழில்நுட்பம், வருவாய், தீயணைப்பு ஆகிய துறை செயலர்களும், பிப்டிக் இயக்குனர் ஆகியோர் உறுப்பினர்களாகவும், தொழில் மற்றும் வணிகத்துறை இயக்குனர் உறுப்பினர் செயலராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.அதேபோல் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக புதுச்சேரி அரசு தொழில் மற்றும் வணிகத்துறை இயக்குனர் ருத்ரகவுடு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

20-ந்தேதிக்குள் கருத்து

புதுச்சேரி மாநிலத்தில் குழாய் மூலம் கியாஸ் இணைப்பு வழங்குவதற்கான வரைவுக்கொள்கை மீதான பொதுமக்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கலாம். மேற்கண்ட வரைவு கொள்கையை தொழில்துறை இயக்குனரகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://industry.py.gov.in சென்று பார்வையிடலாம்.

இக்கொள்கையின் நோக்கமானது புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இயற்கை எரிவாயுவை பசுமை மற்றும் சுத்தமான எரிபொருளாக உபயோகிப்பதை ஊக்குவிக்கவும், இயற்கை எரிவாயுயை நம்பகமான, தடையின்றி வழங்குவதற்கும், மீன்பிடி கப்பல்கள் மற்றும் படகுகளில் திரவ இயற்கை எரிவாயுவை பயன்படுத்த ஊக்குவிப்பது, தொலைத்தொடர்பு சேவை கோபுரங்களில் பயன்படுத்தப்படும் டீசல் ஜெனரேட்டர்களை இயற்கை எரிவாயு ஜெனரேட்டர்களாக மாற்றுதல் போன்றவை அடங்கும்.

இந்த எரிவாயு வினியோக கொள்கையின் மீதான கருத்து மற்றும் ஆலோசனைகளை வருகிற 20-ந்தேதி மாலை 5 மணிக்குள் அதற்கு முன்னதாக ind@py.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கலாம். அல்லது தட்டாஞ்சாவடி தொழில் மற்றும் வணிகத்துறை இயக்குனருக்கு தபால் மூலமாகவும் அனுப்பலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story