புதிய கல்வி கொள்கை ஏற்படுத்தப்படும்


புதிய கல்வி கொள்கை ஏற்படுத்தப்படும்
x

புதுச்சேரியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் புதிய கல்வி கொள்கை ஏற்படுத்தப்படும் என்று நாராயணசாமி தெரிவித்தார்.

காரைக்கால்

புதுச்சேரியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் புதிய கல்வி கொள்கை ஏற்படுத்தப்படும் என்று நாராயணசாமி தெரிவித்தார்.

காரைக்காலில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

புதிய கல்விக்கொள்கை

புதுச்சேரி மாநிலத்தில் தேசிய கல்வி கொள்கையை பா.ஜ.க. கூட்டணி அரசு கொண்டு வந்து, மாணவர்களின் எதிர்காலத்தை கேள்வி குறியாக மாற்றிவிட்டது. காங்கிரஸ் ஆட்சி மீண்டும் வந்தவுடன், புதுச்சேரி மாநிலத்திற்கு என புதிய கல்வி கொள்கை ஏற்படுத்தப்படும்.

புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வந்த கருணாநிதி பெயரிலான காலை சிற்றுண்டி திட்டத்தை பா.ஜ.க. கூட்டணி அரசு காழ்ப்புணர்ச்சி காரணத்தால் நிறுத்தி இருப்பது கண்டனத்துக்குரியது. எனவே புதுச்சேரி அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும்.

சனாதனம்

பிரதமர் மோடியின் ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமில்லை. இந்தியா கூட்டணி அமைந்த பிறகு, இந்தியா என்று சொல்வதற்கு பிரதமர் மோடிக்கு அச்சம் வந்துவிட்டது. அதனால் தான் பாரத் என்று சொல்லத் தொடங்கியுள்ளார்.

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் குறித்து பேசியுள்ளார். சனாதனம் குறித்து ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு உண்டு. எம்மதமும் சம்மதம் என்பது தான் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு.

2 பேர் உயிரிழப்பு

புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி அரசு அறிவித்த மக்கள் நலத்திட்டங்கள் இதுவரை ஒன்று கூட முழுமையாக செயல்படுத்தவில்லை.

புதுச்சேரியில் பேனர்களால் 2 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. முதல்-அமைச்சர், உள்துறை அமைச்சர் என அடுத்தடுத்து புதுச்சேரியை பேனர் மயமாக்கிவிட்டு, திடீரென்று கலெக்டர் பேனர்களுக்கு தடைவிதிப்பது வேடிக்கையாக உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் தக்க பாடம்

உரிய விகிதாச்சாரப்படி காரைக்காலுக்குரிய தண்ணீரை புதுச்சேரி அரசு கேட்டு பெறவில்லை. இப்படி செயலற்ற அரசுக்கு மக்கள் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தக்க பாடம் புகட்டவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, புதுச்சேரி முன்னாள் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், மாவட்ட தலைவர் சந்திரமோகன், முன்னாள் தலைவர் பாஸ்கரன், பொதுசெயலாளர் கருணாநிதி, வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் சுப்பையன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story