இளநீர் குவியலுக்குள் பதுங்கிய நல்ல பாம்பு

இளநீர் குவியலுக்குள் பதுங்கி இருந்த நல்ல பாம்பினை வனத்துறையினர் பிடித்தபோது படமெடுத்து ஆடியதைப் பார்த்து பெண்கள் சிலர் வணங்கினர்.
புதுச்சேரி
இளநீர் குவியலுக்குள் பதுங்கி இருந்த நல்ல பாம்பினை வனத்துறையினர் பிடித்தபோது படமெடுத்து ஆடியதைப் பார்த்து பெண்கள் சிலர் வணங்கினர்.
இளநீர் கடை
புதுவை வேல்ராம்பட்டு துலுக்கானத்தம்மன் நகரை சேர்ந்தவர் ரங்கநாயகி. இவர் ரங்கப்பிள்ளை வீதியில் தலைமை தபால் நிலையம் எதிரே பிளாட்பாரத்தில் இளநீர் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.
மாலையில் வியாபாரத்தை முடித்து விட்டு இளநீரை தார்பாய் போட்டு மூடிவிட்டு செல்வது வழக்கம். அதேபோல் நேற்று மாலையும் வியாபாரத்தை முடித்து சென்றுள்ளார்.
நல்ல பாம்பு புகுந்தது
இன்று காலை வழக்கம்போல் மீண்டும் கடைக்கு வந்து வியாபாரத்தை தொடங்கினார். அப்போது இளநீர் குவியலுக்குள் இருந்து 'புஸ்.. புஸ்' என்று வித்தியாசமான சத்தம் கேட்டதையடுத்து இளநீர்களை உருட்டிப் பார்த்தார்.
அப்போது இளநீர் குவியலுக்குள் நல்ல பாம்பு ஒன்று பதுங்கியிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அங்கு ஏராளமானோர் கூடினர்.
தகவல் அறிந்த அங்கு வனத்துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள் இளநீர் குவியலை விலக்கி லாவகமாக சுமார் 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பை பிடித்தனர். அது படமெடுத்து ஆடியது.
உடனே அங்கிருந்த பெண்கள் சிலர், பாம்பை தெய்வமாக கருதி கையெடுத்து கும்பிட்டு வணங்கினர். சிலர் செல்போன் மூலம் படமெடுத்தனர். பின்னர் அந்த பாம்பு கடலூர் சாலையில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.






