காமராஜர் பள்ளியை தரம் உயர்த்த நடவடிக்கை

காமராஜர் பள்ளியை தரம் உயர்த்த நடவடிக்கை எடுப்பதாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உறுதி அளித்தார்.
காலாப்பட்டு
75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் புதுவையில் உள்ள 75 பள்ளிகளை பார்வையிட்டு வருகிறார். இதில் அவர் காலாப்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பிள்ளை சாவடி என்.வரதன் அரசு நடுநிலைப்பள்ளியை தொடர்ந்து முத்தியால் பேட்டை காமராஜர் அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளியை பார்வையிட்டார். அப்போது காமராஜர் சிலைக்கும், அப்துல் கலாம் உருவப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மாணவர்கள் மத்தியில் பேசுகையில், பிரகாஷ் குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்தது போல காமராஜர் அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். நான் பார்வையிடும் பள்ளிகளில் எத்தகைய தேவை இருந்தாலும் அதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம். இதையே புதிய கல்வி கொள்கையும் அறிவுறுத்துகிறது என்றார்.






