புதுவையில் ஆதி புஷ்கரணி திருவிழா


புதுவையில் ஆதி புஷ்கரணி திருவிழா
x

நவக்கிரகங்களில் ஆண்டுக்கு ஒரு முறை பெயர்ச்சி அடையும் குருபகவான் செல்லும் ராசியை கணக்கிட்டு அந்த ராசிக்குரிய நதிகளுக்கு புஷ்கரணி விழா நடத்தப்படும்.

வில்லியனூர்

நவக்கிரகங்களில் ஆண்டுக்கு ஒரு முறை பெயர்ச்சி அடையும் குருபகவான் செல்லும் ராசியை கணக்கிட்டு அந்த ராசிக்குரிய நதிகளுக்கு புஷ்கரணி விழா நடத்தப்படும்.

காசிக்கு நிகரான ஆறு

மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு குரு பகவான் நாளை (சனிக்கிழமை) பெயர்ச்சி அடைகிறார். இதையொட்டி மேஷ ராசிக்குரிய நதிகளான கங்கை மற்றும் புதுவை மாநிலம் திருக்காஞ்சி சங்கராபரணி ஆற்றில் புஷ்கரணி விழா நடத்தப்படுகிறது.

சங்கராபரணி ஆறு, திருக்காஞ்சி பகுதியில் வடக்கு நோக்கி செல்வதாலும், கங்கை நதிக்கு நிகரானது என்பதாலும் இந்த புஷ்கரணி விழா மிக சிறப்பு பெற்றது.

புஷ்கரணி விழா நாளை தொடக்கம்

புஷ்கரணி விழாவுக்காக சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலையொட்டிய பகுதிகள் சீரமைக்கப்பட்டு உள்ளது. பக்தர்கள் புனித நீராடுவதற்கு வசதியாக படித்துறைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

நாளை (சனிக்கிழமை) தொடங்கும் புஷ்கரணி விழா அடுத்த மாதம் மே 3-ந் தேதி வரை 12 நாட்கள் நடக் கிறது. புஷ்கரணி விழாவின் பூர்வாங்க பூஜைகளாக இன்று காலை 9 மணியளவில் விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் நடைபெற்றது.

நாளை காலை கோபூஜை, கொடியேற்றத்துடன் புஷ்கரணி விழா தொடங்குகிறது. காலை 7.15 மணிக்கு 2-ம் கால பூஜை, கடம் புறப்பாடு நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து 9.41 மணிக்கு கங்கைக்கு நிகரான சங்கராபரணி நதியில் புஷ்கரம் பிறக்கும் நேரத்தில் சப்தநிதி தீர்த்த கலாசாபிஷேகத்தை தொடர்ந்து புனித நீராடல் ஆன்மிக பெரியவர்களால் தொடங்கி வைக்கப்படுகிறது.

புஷ்கரணி விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்

மதியம் 12 மணிக்கு புஷ்கர தீர்த்தவாரியும், மாலையில் சங்கராபரணி ஆற்றில் கங்கா ஆரத்தியும் நடக்கிறது.

சிறப்பு யாகம்

நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு மகாகணபதி, மகாலட்சுமி யாகம், 24-ந் தேதி காலை வராகி சிறப்பு யாகம், 25-ந் தேதி சத்ருசம்ஹார யாகம், 26-ந் தேதி சுயம்வரகலா, கந்தர்வ, சந்தான பரமேஸ்வர யாகம், 27-ந் தேதி தட்சிணாமூர்த்தி குருபகவான் யாகம், 28-ந் தேதி சொர்ணகர்ஷன பைரவர் யாகம் நடக்கிறது.

29-ந் தேதி நவதுர்கா யாகம், 30-ந் தேதி சரபேஸ்வரர், பிரத்தியங்கரா யாகம், மே 1-ந் தேதி லட்சுமிவராகர், சுதர்சனர், தன்வந்திரி யாகம், 2-ந் தேதி மிருத்யுஞ்ஜெயர் யாகம், 3-ந் தேதி 108 கலாசாபிஷேகம் நடக்கிறது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள்

மேலும் 12 நாளும் வேதபாராயணம், சைவாகம பாராயணம், பன்னிரு திருமுறை பாராயணம், மதியம் 12 மணிக்கு தீர்த்தவாரி, மாலை 6 மணிக்கு கங்கா ஆரத்தி மற்றும் இரவில் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

புஷ்கரணி விழாவில் புதுச்சேரி, தமிழகம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் சங்கராபரணி ஆற்றில் நீராடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

போலீஸ் பாதுகாப்பு

இதையொட்டி பாதுகாப்பு பணியில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் சுழற்சி முறையில் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா.சைதன்யா ஆலோசனை வழங்கினார். வரலாற்று சிறப்புமிக்க இந்த விழாவில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். அவர்களுக்கு சிறு தொந்தரவும் இல்லாத வகையில் போலீசார் கவனமுடன் பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

நிகழ்ச்சியில் மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வம்சிதரரெட்டி, போக்கு வரத்து போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வேலைய்யன், ஆறுமுகம், ராஜ்குமார், சீர்த்திவர்மன் மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டனர்.


Next Story