அரசலாற்றில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்


அரசலாற்றில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்
x

காரைக்கால் அரசலாற்றில் நடந்த ஆடிப்பெருக்கு விழாவில் பெண்கள் பூஜை செய்து வழிபட்டனர்.

காரைக்கால்

காரைக்கால் அரசலாற்றில் நடந்த ஆடிப்பெருக்கு விழாவில் பெண்கள் பூஜை செய்து வழிபட்டனர்.

ஆடிப்பெருக்கு விழா

காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் காவிரி கரையோர பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ஆடிப்பெருக்கு விழா இன்று கொண்டாடப்பட்டது.

காவிரி ஆற்றின் கடைமடை பகுதியான காரைக்கால் மாவட்டத்தில் அரசலாறு, திருமலைராஜனாறு, முல்லையாறு, நூலாறு ஆகிய ஆறுகள் பாய்கின்றன. இந்த ஆறுகள் காவிரியின் கிளை ஆறுகளாகும். எனவே ஆடிப்பெருக்கு விழா இந்த ஆறுகளிலும் நேற்று சிறப்பாக நடைபெற்றது.

பூஜை செய்து வழிபட்டனர்

ஆடிப்பெருக்கை முன்னிட்டு, அரசலாறு, நூலாறு, திருமலைராஜன் ஆறுகளில் நேற்று ஓரளவிற்கு தண்ணீர் வந்தது. இங்கு புதுமண தம்பதிகள் மற்றும் பெண்கள் ஏராளமானோர் காவிரி தாய்க்கு படையலிட்டு பூஜை செய்தனர். பின்னர் புதுமண தம்பதிகள் தங்கள் திருமணத்தின் போது அணிந்திருந்த மலர் மாலைகளை காவிரி ஆற்றில் விட்டனர். பெண்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைக்க வேண்டி ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிற்றை கட்டிக்கொண்டனர்.

கன்னிப்பெண்கள் தங்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டியும், நல்ல மணமகன் அமைய வேண்டியும், காவிரி தாயை வழிபட்டு மஞ்சள் கயிறுகளை கட்டிக்கொண்டனர். இதேபோல் நெடுங்காட்டு அகரமாங்குடி வாஞ்சி ஆற்றங்கரையில், ஏராளமான பெண்கள் கூடி சிறப்பு பூஜைகள் செய்து ஆடிபெருக்கை கொண்டாடினர்.

விசுவ இந்து பரிஷத்

ஆடிப்பெருக்கை முன்னிட்டு, காரைக்கால் மாவட்ட விசுவ இந்து பரிஷத் சார்பில் காவிரியை பெருமாள் சகோதரியாக கருதி, சீர் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அதுசமயம், காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட சீர் வரிசை பொருட்கள், பூஜை செய்ய பட்டு, அரசலாற்றில் விடப்பட்டது.

மேலும் அங்கு வந்திருந்த புதுமண தம்பதிகளுக்கு புடவை, மங்களப் பொருட்களும், பெண்களுக்கு மங்கள பொருட்களுடன் தாம்பூலமும் வழங்கப்பட்டது.


Next Story