முதுகலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

காரைக்கால் அரசு பட்ட மேற்படிப்பு மையத்தில் முதுகலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கியது.
காரைக்கால்
காரைக்கால் கருணாநிதி அரசு பட்ட மேற்படிப்பு மையத்தில், இந்த கல்வி ஆண்டிற்கான (2023-2024) முதுகலை பாடப்பிரிவான எம்.காம்., எம்.ஏ., எம்.எஸ்.டபுள்யூ. மற்றும் எம்.எஸ்சி பட்டப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது.
இந்த கலந்தாய்விற்கு மாணவ- மாணவிகள் தரவரிசைப்படி மொத்தம் 300 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இன்றைய கலந்தாய்வில், முதுகலை வணிகவியல், பொருளாதாரம், தமிழ், வரலாறு ஆகிய பாடங்களுக்கு சுமார் 80 பேர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் சேர்க்கை ஆணையை கல்லூரி முதல்வர் ஆசாத்ராஜா வழங்கினார். நாளை (வெள்ளிக்கிழமை) கணிதம், ஆங்கிலம், கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது. தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என்பதால் அன்றைய தினம் கலந்தாய்வு கிடையாது. 9-ந்தேதி வேதியியல், தாவரவியல், இயற்பியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும், 10-ந் தேதி சமூக நலன் மற்றும் பொது நிர்வாக பிரிவு ஆகிய பாடங்களுக்கும் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற உள்ளது.






