'அக்னிபுத்திரன்' புதிய சிலை ஊர்வலம்

வில்லியனூர் திருக்காமீசுவரர் கோவில் பிரம்மோற்சவ விழாவில் இன்று செயற்கை யானைகளுடன் ‘அக்னிபுத்திரன்’ சிலை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
வில்லியனூர்
வில்லியனூர் திருக்காமீசுவரர் கோவில் பிரம்மோற்சவ விழாவில் இன்று செயற்கை யானைகளுடன் 'அக்னிபுத்திரன்' சிலை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
பிரம்மோற்சவ விழா
வில்லியனூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீகோகிலாம்பிகை உடனுறை திருக்காமீசுவரர் கோவில் சோழர் காலத்தை சேர்ந்த பழமையானதாகும்.
இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ தேரோட்ட விழாவின் கொடியேற்றம் கடந்த 24-ந் தேதி நடந்தது. தினமும் சுவாமி வீதியுலா மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்து வருகிறது.
கடந்த 27-ந் தேதி இரவு தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி பாரிவேட்டை நடந்தது. விழாவின் 6-ம் நாளான இன்று வன்னியர் குல சத்திரியர்கள் சார்பில் 63 நாயன்மார்களுடன் சுவாமி புறப்பாடு, பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து வீதி உலா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் புதிதாக செய்யப்பட்ட 'அக்னிபுத்திரன்' சிலை அலங்கரிக்கப்பட்ட செயற்கை யானைகளுடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக சபாநாயகர் செல்வம், வன்னியர் பாதுகாப்பு பேரியக்க தலைவர் செந்தில் கவுண்டர், மாநில பா.ம.க. அமைப்பாளர் கணபதி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தேரோட்டம்
இரவு 7 மணிக்கு சிறப்பு மகாதீபாரதனையும், இரவு சுவாமி வீதி உலாவும் தொடர்ந்து ரிஷப, மயில்வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடைபெற்றது. முக்கிய விழாவான தேரோட்டம் வரும் வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு நடக்கிறது.