விஷம் குடித்து அமுதசுரபி ஊழியர்கள் தற்கொலை முயற்சி


விஷம் குடித்து அமுதசுரபி ஊழியர்கள் தற்கொலை முயற்சி
x

நிலுவை சம்பளம் வழங்கக்கோரி 4 அமுதசுரபி ஊழியர்கள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி

நிலுவை சம்பளம் வழங்கக்கோரி 4 அமுதசுரபி ஊழியர்கள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரசு நிறுவனம்

புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான, அமுதசுரபி கூட்டுறவு நிறுவனத்தின் சார்பில் மளிகைப் பொருட்கள் விற்பனை நிலையம், பெட்ரோல் பங்க், மதுபான கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. இங்கு 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 32 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

இந்த தொகையை வழங்க கோரி புதுவை காந்தி வீதியில் உள்ள அமுதசுரபியின் தலைமை அலுவலகத்தில் கடந்த 30 நாட்களுக்கு மேலாக ஊழியர்கள் பல்வேறு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விஷம் குடித்தனர்

இந்தநிலையில் இன்றும் அமுதசுரபி ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்தது. அப்போது நிலுவை சம்பளம் வழங்காததை கண்டித்து அரசுக்கு எதிராக அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

அப்போது ஊழியர்களான அய்யனாரப்பன், மணிமாறன், சிவஞானம், குமரன் ஆகியோர் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த பூச்சி மருந்து, பினாயில், வீடு சுத்தம் செய்யும் திராவகம் ஆகியவற்றை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

இதை கண்டு அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்களை பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ், சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

ஆஸ்பத்திரியில் அனுமதி

வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவர்களை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. அன்பழகன் மற்றும் பலர் நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்கள்.


Next Story