'புதுச்சேரி தமிழ் வளர்ச்சி சிறகம்' அதிகாரி நியமனம்


புதுச்சேரி தமிழ் வளர்ச்சி சிறகம் அதிகாரி நியமனம்
x

புதுச்சேரி கலை பண்பாட்டு துறையின் கீழ் செயல்படும் புதுச்சேரி தமிழ் வளர்ச்சி சிறகம் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஆணையை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

புதுச்சேரி

புதுவை மாநிலத்தில் பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த 'புதுச்சேரி தமிழ் வளர்ச்சி சிறகம்' மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று கடந்த பட்ஜெட்டில் முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். அதன்படி கலை பண்பாட்டுத் துறையின் கீழ் 'தமிழ் வளர்ச்சி சிறகம்' மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் சிறப்பு அதிகாரியாக ஓய்வு பெற்ற பேராசிரியர் வாசுகி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த குழுவில் தமிழ் அறிஞர்கள் வேல்முருகன், இளங்கோ, வெங்கடேசன், பூபதி பெரியசாமி, சுந்தரமுருகன் மற்றும் புதுவை பல்கலைக்கழகம், காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம், தாகூர் கலைக்கல்லூரி, பாரதிதாசன் மகளிர் கல்லூரி தமிழ்துறை தலைவர்கள் உள்ளனர். இவர்களுக்கு நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி இன்று சட்டசபை வளாகத்தில் உள்ள முதல்-அமைச்சர் அலுவலகத்தில் நடந்தது. நியமன ஆணையை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

நிகழ்ச்சியில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா, நாஜிம் எம்.எல்.ஏ., கலை பண்பாட்டுத்துறை செயலாளர் நெடுஞ்செழியன், இயக்குனர் கலியபெருமாள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இது குறித்து முதல்-அமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திட்டங்கள் வழங்கப்படும்

புதுச்சேரி தமிழ் வளர்ச்சி சிறகம் குழுவானது, தமிழ்மொழி, இலக்கியம் மற்றும் கலாசாரத்தை மேம்படுத்த உதவும். பள்ளி, கல்லூரிகளில் தமிழ் மொழியை கற்பிக்கவும், அன்றாட வாழ்வில் தமிழ் மொழி பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தவும், தமிழ் மொழியின் தரத்தை மேம்படுத்தவும், ஆசிரியர்களுக்கான திட்டங்கள் வழங்கப்படும்.

தமிழ்மொழி புத்தகங்களை வெளியிடுதல், இசை, நடனம் மற்றும் நாடகம் போன்ற கலாசார நிகழ்ச்சிகளை நடத்த இந்த குழு உதவும். தமிழ் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பொருளாதார, வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த வழிவகை செய்யும். உலக தமிழ் மாநாட்டை புதுச்சேரியில் நடத்துவதற்கு அனைத்து ஆலோசனைகளையும், ஆதரவையும் வழங்கும். அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் தமிழ் மொழியை கட்டாய பாடமாக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளும். மாணவர்கள் தமிழில் கட்டுரை எழுதுவதற்கும், பிழையின்றி பேசும் திறன் பெற கருத்தரங்கு, பயிலரங்குகள் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story