திருக்காஞ்சி புஷ்கரணி விழாவில் ஆந்திர மந்திரி ரோஜா தரிசனம்


திருக்காஞ்சி புஷ்கரணி விழாவில் ஆந்திர மந்திரி ரோஜா தரிசனம்
x

திருக்காஞ்சி புஷ்கரணி விழாவில் ஆந்திர மந்திரி ரோஜா தரிசனம் செய்தார்.

வில்லியனூர்

திருக்காஞ்சி புஷ்கரணி விழாவில் ஆந்திர மந்திரி ரோஜா தரிசனம் செய்தார்.

புஷ்கரணி விழா

புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள சங்கராபரணி ஆற்றங்கரையில் திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் ஆதி புஷ்கரணி விழா கடந்த 22-ந் தேதி தொடங்கி வருகிற 3-ந் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது. விழாவில் தினமும் அந்தந்த நட்சத்திரகாரர்கள் சங்கராபரணி ஆற்றில் புனித நீராடி, திருக்காஞ்சி கங்கவராக நதீஸ்வரரை தரிசனம் செய்து வருகின்றனர்.

விழாவில் 10-ம் நாளான இன்று காலை 9 மணியளவில் சரபேஸ்வரர், பிரத்தியங்கிரா மகா யாகம் நடந்தது. தொடர்ந்து மதியம் 12 மணிக்கு சங்கராபரணி நதியில் தீர்த்தவாரி நடந்தது.

கங்கா ஆராத்தி

தொடர்ந்து மாலை 6.30 மணியளவில் நதிக்கரையில் கங்கா ஆராத்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மந்திரியும் நடிகையுமான ரோஜா கலந்துகொண்டு தரிசனம் செய்தார்.

பின்னர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் தேனீ.ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, வெங்கடேசன் எம்.எல்.ஏ. உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கலாசார ஒற்றுமை

புஷ்கரணி விழாவில் கலந்துகொண்டது குறித்து ரோஜா கூறுகையில், "இந்த மகத்தான நிகழ்வில் கலந்துகொண்டதில் மகிழ்ச்சி. இந்த கோவிலின் சிறப்புகளை கேட்டபோது பித்ருகள் தோஷம் நீங்க இங்கு தர்ப்பணம் செய்வது சிறப்பு என்றார்கள். மனிதர்களின் மிக முக்கியமான கடன்களில் ஒன்றானது பித்ரு தோஷம். அதனை நிவர்த்தி செய்யும் ஸ்தலமாக இது விளங்குவது மிக சிறப்பாகும். இது போன்ற விழாவை நடத்தும்போது மற்ற மாநிலங்களில் இருந்து வருபவர்களால் கலாசார ஒற்றுமை மேம்படும்" என்றார்.

பக்தர்கள் செல்பி...

முன்னதாக கோவிலில் தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த ரோஜாவுடன் பக்தர்கள் பலர் செல்பி எடுக்க முண்டியடித்தனர். பாதுகாப்பு கருதி அவர்களை போலீசார் தடுத்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story