சுற்றுலா தலங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

சுற்றுலா தலங்களில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து அமைச்சர் லட்சுமிநாராயணன் உத்தரவிட்டார்.
புதுச்சேரி
சுற்றுலா தலங்களில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து அமைச்சர் லட்சுமிநாராயணன் உத்தரவிட்டார்.
புதுவை பொதுப்பணி- சுற்றுலா துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சுற்றுச்சூழலுக்கு தீங்கு
புதுவையில் உள்ள சுற்றுலா தலங்கள், கடற்கரை பகுதிகள், தங்கும் விடுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் (நெகிழி) பொருட்களை அதிக அளவில் பயன்படுத்துவதால், சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல், திறந்தவெளியில் அதை தூக்கி வீசுவதாக அரசுக்கு பல்வேறு புகார்கள் வந்துள்ளன.
சில இடங்களில் உணவுப் பொருட்கள், பாலித்தீன் கவரில் அடைக்கப்பட்ட குடிநீர், உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் தாள்களிலும், பாக்கெட்டுகளிலும் அடைத்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த வகையான பிளாஸ்டிக் பொருட்களின் விற்பனை இனி தவிர்க்கப்பட வேண்டும். சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களையே பயன்படுத்த வேண்டும். சுற்றுலா தலங்களில் இனிமேல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என கடுமையாக அறிவுறுத்தப்படுகிறது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்
அதாவது, பிளாஸ்டிக் தாள், ஒட்டும் பிளாஸ்டிக் தாள்கள், சாப்பாட்டு மேஜை மற்றும் தட்டுகளில் விரிக்க பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் விரிப்புகள், தெர்மாகோல் தட்டுகள், பிளாஸ்டிக் பூசிய காகித தட்டுகள், கோப்பைகள், தேநீர் குவளைகள், தெர்மாகோல் கோப்பைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், உறிஞ்சு குழல்கள், அனைத்து அளவிலான, தடிமனான பிளாஸ்டிக் கேரி பேக்குகள், பிளாஸ்டிக் கொடிகள், நெய்யப்படாத பாலிப்ரோப்பிலீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் துணிகள், கயிறு தாள்களினால் செய்யப்பட்ட பைகள் தவிர, பிற அனைத்து வகையான பிளாஸ்டிக் பைகளையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
பிளாஸ்டிக் இல்லாத சுற்றுலா தலம் மற்றும் பிளாஸ்டிக் இல்லாத சுற்றுலா மண்டலம் என்ற அறிவிப்பு பலகைகளை அந்த பகுதியில் வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






