ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தீக்குளிக்க முயற்சி

காரைக்காலை அடுத்த நெடுங்காட்டில் புறம்போக்கு நிலத்தில் கட்டிய வீட்டின் ஒரு பகுதியை இடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தீக்குளிக்க முயற்சி.
நெடுங்காடு
புறம்போக்கு நிலத்தில் கட்டிய வீட்டின் ஒரு பகுதியை இடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
புறம்போக்கு நிலம்
காரைக்காலை அடுத்த நெடுங்காடு அண்டூர் கன்னிகோவில் தெரு பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் சுப்பிரமணியன் என்பவர் வீடு கட்டி தனது மகன்களுடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த ஒரு மாதத்திற்கு முன் பெய்த மழை காரணமாக அந்த வீடு சேதமடைந்தது. எனவே சுப்பிரமணியன் அப்பகுதியில் உள்ள வேறொரு வீட்டுக்கு குடும்பத்துடன் வாடகைக்கு குடிபெயர்ந்தார்.
இந்தநிலையில் அரசு ஊழியரான ஆரோக்கிய செல்வி என்பவர், சுப்பிரமணியத்தின் வீடு அருகே மனைப்பட்டா ஒன்றை விலைக்கு வாங்கினார். அந்த இடத்திற்கு சாலை வேண்டும் என்பதற்காக நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் புகார் செய்தார். அதன்படி அங்கு சென்று பார்த்ததில் பொது சாலை வரும் இடத்தில் சுப்பிரமணியம் வீட்டின் ஒரு பகுதியாக கழிவறை, கொட்டகை அமைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
தீக்குளிக்க முயற்சி
இதையடுத்து அங்கு பொக்லைன் எந்திரம் மற்றும் போலீசாருடன் வந்த கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் பாலன், திடீரென்று கழிப்பறை கட்டிடத்தையும், அருகில் இருந்த கொட்டகையையும் இடிக்க முயன்றார்.
இதையறிந்த சுப்பிரமணியனின் மகன்களான சின்னையன், ரமேஷ், சுரேஷ் ஆகியோர் அங்கு வந்து கட்டிடத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் அதிகாரிகள் கட்டிடத்தை இடிக்க முயன்றனர். இதனால், ஆத்திரம் அடைந்த அவர்கள் 3 பேரும் தங்களது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், 3 பேரையும் தடுத்து, அவர்கள் தலையில் தண்ணீர் ஊற்றி தீவைப்பதை தடுத்தனர். பின்னர் அவர்கள் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் கழிப்பறையும், கொட்டகையும் இடிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.