பாரதியார் பல்கலைக்கூடம் புரிந்துணர்வு ஒப்பந்தம்


பாரதியார் பல்கலைக்கூடம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
x

சத்தீஸ்கர் மாநில பல்கலைக்கழகத்துடன் பாரதியார் பல்கலைக்கூடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

புதுச்சேரி

சத்தீஸ்கர் மாநில பல்கலைக்கழகத்துடன் பாரதியார் பல்கலைக்கூடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

ரங்கசாமி முன்னிலையில்...

புதுவை அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக்கூடம், சத்தீஸ்கர் மாநிலம் கைராகர் இந்திரகலா சங்கீத பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி முதல்-அமைச்சர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

முதல்-அமைச்சர் ரங்கசாமி, கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தத்தில் கலை பண்பாட்டுத்துறை செயலாளர் நெடுஞ்செழியன், இந்திரகலா சங்கீத பல்கலைக்கழக துணைவேந்தர் மோஷிதா சந்தராகர் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

அப்போது பாஸ்கர் எம்.எல்.ஏ., இந்திரகலா சங்கீத பல்கலைக்கழக பதிவாளர் இந்தர் தியோ திவாரி, புதுவை கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் கந்தன் என்ற சிவராஜன், பாரதியார் பல்கலைக்கூட பொறுப்பு முதல்வர் பி.வி.போஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

பயிற்சி பட்டறைகள்

1956-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சத்தீஸ்கர் இந்திரகலா சங்கீத பல்கலைக்கழகமானது இசை, நடனம், நுண்கலை, தியேட்டர் ஆர்ட்ஸ் ஆகிய பிரிவுகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டு பிரத்தியேகமாக தொடங்கப்பட்ட ஆசியாவின் முதல் பல்கலைக்கழகமாகும். இப்பல்கலைக்கழகம் சார்பில் லதா மங்கேஷ்கர், எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தப்படி பல்வேறு கருத்தரங்குகள், பயிற்சி பட்டறைகள் மூலம் புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூட மாணவர்கள் தங்கள் திறமைகளை மாறிவரும் சூழலுக்கு ஏற்ப திறம்பட மெருகூட்டி பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கு சிறந்த வசதியை உருவாக்கி தந்துள்ளது.

புதிய பாடப்பிரிவுகள்

இந்த ஒப்பந்தம் வாயிலாக மேற்கண்ட இரு கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்களும், மாணவர்களும் தங்களுக்குள் திறமைகளை பரிமாற்றம் செய்து கொள்ளவும், புதிய நுணுக்கங்கள் மற்றும் கலைகளை கற்றுக்கொள்ளவும், பாரம்பரிய கலைகளை தேசிய மற்றும் சர்வதேச அளவில் கொண்டு சேர்க்கவும் வாய்ப்புகள் கிடைக்கும். மேலும் புதிய டிப்ளமோ, பட்டய படிப்பு பிரிவுகளை பாரதியார் பல்கலைக்கூடத்தில் தொடங்கவும் புதிய பாதையை வகுத்துள்ளது.


Next Story