பெரிய மார்க்கெட் வியாபாரிகள் கடையடைப்பு


பெரிய மார்க்கெட் வியாபாரிகள் கடையடைப்பு
x

ஒரே நேரத்தில் முழுமையாக இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பெரிய மார்க்கெட் வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரி

ஒரே நேரத்தில் முழுமையாக இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பெரிய மார்க்கெட் வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர்.

வியாபாரிகள் எதிர்ப்பு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் புதுவை பெரிய மார்க்கெட் ரூ.56 கோடி செலவில் புதிதாக கட்டப்பட உள்ளது. இதையொட்டி அங்குள்ள வியாபாரிகளை ரோடியர் மில் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தற்காலிக மார்க்கெட்டுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் அதற்கு வியாபாரிகள் மறுப்பு தெரிவித்தனர். ஒரே நேரத்தில் பெரிய மார்க்கெட் கடைகளை இடிக்காமல் பகுதி பகுதியாக இடித்து கடைகளை கட்டி ஒதுக்க வேண்டும். அந்த கடைக்காரர்களுக்கு பழைய சிறைச்சாலை வளாகத்தில் தற்காலிக கடை போட அனுமதிக்க வேண்டும் என்று கோரினர். ஆனால் அரசு இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

கடையடைப்பு

ஆனாலும் இதை வலியுறுத்தி தொடர்ந்து வியாபாரிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி இன்று பெரிய மார்க்கெட்டில் கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடைகள் அனைத்தும் மூடிக் கிடந்தன. மீன் மார்க்கெட்டும் செயல்படவில்லை. கடைகளில் கருப்புக்கொடிகள் ஏற்றப்பட்டு இருந்தன.

பெரிய மார்க்கெட் வியாபாரிகளுக்கு ஆதரவாக நேரு வீதி, அண்ணா சாலை, ரங்கப்பிள்ளை விதி, அம்பலத்தடையார் மடத்துவீதி, காந்தி வீதி, மிஷன் வீதி உள்ளிட்ட முக்கியமான வீதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் சின்ன மார்க்கெட், நெல்லித்தோப்பு, சாரம், முதலியார்பேட்டை உள்ளிட்ட மார்க்கெட்டுகளிலும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.

ஆர்ப்பாட்டம்

கடைகளை அடைத்த வியாபாரிகள் நேரு வீதி பழைய சிறைச்சாலை அருகே கூடினார்கள். அங்கிருந்து கருப்புக்கொடிகளுடன் ஊர்வலமாக நேருவீதி- காந்தி வீதி சந்திப்பில் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். வியாபாரிகளின் கடையடைப்பு போராட்டத்தால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் புதுவையின் இருதய பகுதியாக விளங்கும் நேரு வீதி, காந்தி வீதி உள்ளிட்ட முக்கிய சாலைகள் இன்று வெறிச்சோடி காணப்பட்டன.


Next Story