மரத்தில் மோதி பலியான என்ஜினீயர் உடலை வாங்க மறுத்து சாலைமறியல்


மரத்தில் மோதி பலியான என்ஜினீயர் உடலை வாங்க மறுத்து சாலைமறியல்
x

புதுவையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டதால், மரத்தில் மோதிய என் ஜினீயர் பலியானார்.அவரது உடலை வாங்க மறுத்து சாலைமறியல் நடந்தது.

புதுச்சேரி

பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டதால், மரத்தில் மோதிய என் ஜினீயர் பலியானார்.அவரது உடலை வாங்க மறுத்து சாலைமறியல் நடந்தது.

என்ஜினீயர் பலி

புதுவை முத்துப்பிள்ளைபாளையம் ராதாநகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரது மகன் விஷால் (வயது 26). என்ஜினீயர். இவர் கடந்த 7-ந் தேதி நள்ளிரவு தனது மோட்டார் சைக்கிளில் கடற்கரைக்கு செல்லும் விதமாக லெப்போர்தனே வீதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது சிலர் ரோட்டில் நின்று கொண்டு அந்த வழியாக சென்ற வாகனங்களை மறித்து பிரச்சினை செய்தனர். அதில் ஒருவர் விஷாலை அடிக்கப்போவதுபோல் கையை ஓங்கியுள்ளார்.

அந்த நபரிடம் சிக்காமல் விஷால் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றார். இதில் நிலைதடுமாறிய அவர் சாலையோரம் உள்ள மரத்தில் மோதி உயிரிழந்தார்.

பிறந்தநாள் கொண்டாட்டம்

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள், உறவினர்கள் விஷாலின் சாவுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.அப்போது இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். மேலும் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

விசாரணையில், லப்போர்த்தனே வீதியை சேர்ந்த மோனிஷா (33) தனது பிறந்தநாளை, கணவர் கார்த்திக் சங்கர் (40) மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடினார்.

4 பேர் கைது

அப்போது கார்த்திக்சங்கர், நண்பர்கள் குருசுக்குப்பம் மணவெளிவீதியை சேர்ந்த நவீன்குமார் (24), ஈஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்த சூரியகுமார் (33), அரியாங்குப்பம் கவுண்டர் வீதியை சேர்ந்த அருண்தாஸ் (35), முகேஷ் ஆகியோர் மது குடித்து விட்டு அவ்வழியாக வந்த வாகனங்களை மறித்து தகராறு செய்துள்ளனர். அந்த வேளையில்தான் விஷால் தப்பிக்க முயன்று மரத்தில் மோதி விபத்தில் சிக்கியது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவரது சாவுக்கு காராணமான கார்த்திக்சங்கர், நவீன்குமார், சூரியகுமார், அருண்தாஸ் ஆகிய 4 பேரை கைது செய்தனர். மோனிஷா, நவீன் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வந்தனர்.

சாலை மறியல்

இந்த நிலையில் விஷால் உடல் இன்று காலை கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், அவர்கள் உடலை வாங்க மறுத்த உறவினர்கள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு வழுதாவூர் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்த கோரிமேடு போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாருக்கும், மறியலில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து அங்கு வந்த எம்.எல்.ஏ.க்கள் நேரு, வைத்தியநாதன் ஆகியோரும் பேச்சுவார்த்தை நடத்தி சாவுக்கு காரணமான மேலும் 2 பேர் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story