கார்னிவல் விழாவில் படகு, மாரத்தான் போட்டி

கார்னிவல் விழாவில் மலர் கண்காட்சி மற்றும் உணவுத் திருவிழா உள்ளிட்ட பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. மேலும் பரதநாட்டியம், இசைநிகழ்ச்சி மற்றும் புஷ்பவனம் குப்புசாமியின் கிராமிய இசைக்கச்சேரியும் நடைபெற்றன.
காரைக்கால்
காரைக்கால் கார்னிவல் விழாவில் மீனவர்களுக்கு படகு போட்டியும், மாணவர்களுக்கு மாரத்தான் போட்டியும் நடைபெற்றது.
கார்னிவல் திருவிழா
காரைக்கால் மாவட்ட நிர்வாகமும், சுற்றுலா துறையும் இணைந்து கார்னிவல் திருவிழா 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு நடத்துகிறது. இந்த விழா நேற்று தொடங்கி நாளை மறுநாள் (புதன்கிழமை) வரை நடக்கிறது.
நேற்று மாலை ரோடு ஷோ எனும் கலை நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. இவ்விழாவினை புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமை தாங்கி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மாவட்ட கலெக்டர் முகமது மன்சூர், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோடுஷோ, தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து புறப்பட்டு பாரதியார் வீதி மற்றும் எம்.ஓ.எச். பெட்ரோல் பங்க் வழியாக அரசு விளையாட்டு அரங்கை சென்றடைந்தது.
குதிரை வண்டியில் வந்த அமைச்சர்
ரோடுஷோ நடந்து கொண்டிருக்கும்போது, திடீரென அமைச்சர் சந்திர பிரியங்கா குதிரை வண்டி ஒன்றில், தனி ஆளாக ஏறி ஓட்டி சென்றார். பின்னர் குதிரை வண்டியில் எம்.எல்.ஏ. நாஜிமும் அமர்ந்து கொண்டார். தொடர்ந்து குதிரை வண்டியை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சந்திர பிரியங்கா ஓட்டி சென்றார்.
ரோடு ஷோ நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வெளி மாநில நாடக கலைஞர்கள், நாட்டுப்புற கலைஞர்கள் மற்றும் அலங்கார ஊர்திகள் கலந்து கொண்டது.
தொடர்ந்து, இரவு காரைக்கால் அரசு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கார்னிவல் விழா தொடக்க நிகழ்ச்சியில், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சந்திர பிரியங்கா, சாய் சரவணன்குமார், எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், நாக.தியாகராஜன், சிவா, மாவட்ட கலெக்டர் முகமது மன்சூர் மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாரத்தான் போட்டி
கார்னிவல் விழாவில் மலர் கண்காட்சி மற்றும் உணவுத் திருவிழா உள்ளிட்ட பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. மேலும் பரதநாட்டியம், இசைநிகழ்ச்சி மற்றும் புஷ்பவனம் குப்புசாமியின் கிராமிய இசைக்கச்சேரியும் நடைபெற்றன.
கார்னிவல் நிகழ்ச்சியின் 2-ம் நாள் நிகழ்ச்சியாக, இன்று காலை 5 கிலோ மீட்டர் தொலைவிலான மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.
படகு போட்டி
இதனை தொடர்ந்து அரசலாற்றில் படகு போட்டி நடைபெற்றது. இதில் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த காரைக்கால் மேடு, கிளிஞ்சல் மேடு, காளி குப்பம், மண்டபத்தூர், கீழக்காசாக்குடி மேடு உள்ளிட்ட 11 மீனவ கிராமங்களை சேர்ந்த 11 படகுகள் பங்கேற்றன.
சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இப்போட்டியில் முதல் இடத்தை காளிகுப்பமும், 2-வது இடத்தை மண்டபத்தூரும், 3-வது இடத்தை கீழக்காசாக்குடி மேடு மீனவர்களும் பிடித்தனர். தொடர்ந்து கடற்கரையில் பீச் வாலிபால் போட்டியும், விளையாட்டு அரங்கில் கால்பந்து, கைப்பந்து போட்டியும், காரைக்கால் காமராஜர் திடலில் கபடி போட்டியும் நடைபெற்றன. மாலையில் அரசு விளையாட்டு அரங்கில் நாய்கள் கண்காட்சியும் நடைபெற்றது.






