அல்ஜீரிய நாட்டு பெண்ணை மணந்த புதுவை என்ஜினீயர்


அல்ஜீரிய நாட்டு பெண்ணை மணந்த புதுவை என்ஜினீயர்
x

புதுவையில் வள்ளலாரின் சன்மார்க்க முறைப்படி அல்ஜீரியா நாட்டு முஸ்லிம் பெண்ணை புதுவை என்ஜினீயர் திருமணம் செய்துகொண்டார்.

புதுச்சேரி

வள்ளலாரின் சன்மார்க்க முறைப்படி அல்ஜீரியா நாட்டு முஸ்லிம் பெண்ணை புதுவை என்ஜினீயர் திருமணம் செய்துகொண்டார்.

கம்ப்யூட்டர் என்ஜினீயர்

புதுவை சித்தன்குடியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி நோயலின். இவர் பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். இவர்களது மகன் அபிலாஷ். நெதர்லாந்து நாட்டில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.

அவருடன் பணிபுரியும் அல்ஜீரியா நாட்டை சேர்ந்த பாத்திமா அப்பி என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அபிலேஷின் தந்தை இந்து. தாய் கிறிஸ்தவர்.

சன்மார்க்க முறைப்படி திருமணம்

பெண் இஸ்லாமியர் என்பதால் எந்த மதத்தின் முறையில் திருமணம் செய்வது என்பது தொடர்பாக பலருடன் ஆலோசனை நடத்தினார்கள். இறுதியில் வள்ளலார் உருவாக்கிய சன்மார்க்க முறைப்படி திருமணம் செய்வது என்று இருதரப்பிலும் முடிவு செய்யப்பட்டது.

இதன்படி அவர்களது திருமணம் தட்டாஞ்சாவடியில் உள்ள சமரச சத்திய சாதனை சங்கம் எனப்படும் வள்ளலார் அவையில் இன்று திருமணம் நடைபெற்றது. தமிழர் பண்பாட்டுப்படி மணமகன் அபிலாஷ் வேட்டி-சட்டையும், மணமகள் பாத்திமா அப்பி சேலையும் அணிந்திருந்தனர். அவர்கள் இருவரும், திருக்குறள் மற்றும் வள்ளலாரின் திருமுறையின் மீதும் உறுதியேற்றனர். பின்னர் மணமகன், மணமகள் கழுத்தில் தங்க சங்கிலி அணிவித்து மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டனர்.

வள்ளலார் அவை நிர்வாகிகள் வள்ளலார் எழுதிய திருவருட்பாவின் 6-ம் திருமுறை பாடலை அகவல் பாராயணம் செய்து திருமணத்தை நடத்தி வைத்தனர்.

அனைத்து மத பண்டிகை

இந்த திருமணம் குறித்து அபிலாஷ் கூறும்போது, எனது தந்தை இந்து. தாய் கிறிஸ்தவர். மனைவி இஸ்லாமியர். அதனால் எல்லோருக்கும் பொதுவான வள்ளலாரின் வழியில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம். நான் சிறு வயதில் கோவிலுக்கும், சர்ச்சுக்கும் செல்வேன். இப்போது எனது மனைவி இஸ்லாமியர் என்பதால் ரமலான் காலங்களில் நோன்பு இருப்பதை நிறுத்தப்போவதில்லை. அனைத்து மத பண்டிகைகளையும் நாங்கள் கொண்டாடுவோம் என்றார்.

பாத்திமா அப்பி கூறும்போது, எங்களது எண்ணமும், சிந்தனைகளும் ஒரே மாதிரியாக இருப்பதால் எங்களுக்குள் மத பாகுபாடு எதுவும் வராது என்று குறிப்பிட்டார்.

திருமணத்தில் அபிலாஷ், பாத்திமா அப்பி ஆகியோரின் பெற்றோர், உறவினர்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story