போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு

திருக்கனூர் அருகே பூட்டிக்கிடந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை, பணம் திருட்டு போனது.
திருக்கனூர்
திருக்கனூர் அருகே பூட்டிக்கிடந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை, பணம் திருட்டு போனது.
இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு
திருக்கனூர் அருகே உள்ள செட்டிப்பட்டு மேட்டுத் தெருவை சேர்ந்தவர் சண்முகம் (வயது 52). இவர், புதுச்சேரி காவல்துறையில் ஏனாம் பிராந்தியத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார். புதுச்சேரி நகர பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் அவர், அவ்வப்போது செட்டிப்பட்டில் உள்ள தனது சொந்த வீட்டிற்கு சென்று வருவது வழக்கம்.
வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்து நேற்று முன்தினம் பூட்டிக்கிடந்த அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், வீட்டிலிருந்த 3 கிராம் தங்க நகை, ரூ.3,000 ரொக்கம் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் திருக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர் சம்பவம்
ஏற்கனவே மண்ணாடிப்பட்டு பகுதியைச் சேர்ந்த தனியார் கம்பெனி ஊழியர் தில்லை கோவிந்தன் வீட்டில் 6 பவுன் நகை, 110 கிராம் வெள்ளி, ரொக்கம் ரூ.12 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து விட்டு சென்றனர். இதுபோல் வாதானூர் பகுதியில் ஒரு விஞ்ஞானி வீட்டில் நகை,பணம் வெள்ளிப் பொருட்கள் மட்டுமல்லாது வீட்டில் இருந்த பூண்டு, காய்கறிகள், சிலிண்டர் ஆகியவற்றையும் அள்ளி சென்றனர்.
இதே பாணியில் திருக்கனூர் அருகே உள்ள தமிழகப் பகுதியான சித்தலம்பட்டு கிருஷ்ணா நகரில் மருந்து கடை ஊழியர் ரமேஷ் வீட்டிலும் திருட்டு நடந்தது. இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.
எனவே திருக்கனூர் பகுதியில் தொடர்ச்சியாக நடக்கும் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். அதை தடுக்க போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்துவதுடன் மர்ம ஆசாமிகளை கைது செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் ஆதங்கமாக உள்ளது.