நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்


முதல்-அமைச்சர் ரங்கசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி

முதல்-அமைச்சர் ரங்கசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

மண்ணாடிப்பட்டு

முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு இன்று பிறந்தநாள் ஆகும். அவரது பிறந்தநாள் புதுவை மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மண்ணாடிப்பட்டு தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் திருக்கனூர் கடை வீதி முழுவதும் கொடி தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. விழாவுக்கு முன்னாள் துணை சபாநாயகர் டி.பி.ஆர்.செல்வம் தலைமை தாங்கினார். தொகுதி தலைவர் ஞானசேகர், கட்சி பிரமுகர்கள் அறிபுத்திரி, சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருக்கனூர், சோரப்பட்டு, கூனிச்சம்பட்டு, சுத்துக்கேணி, லிங்காரெட்டிபாளையம், காட்டேரிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் துணை சபாநாயகர் டி.பி.ஆர்.செல்வம் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

ஏ.எம்.என். குளோபல் குரூப்

சென்னை ஏ.எம்.என்.குளோபல் குரூப் நிறுவனம் சார்பில் நேரு வீதியில் அமைந்துள்ள இந்தியன் காபி அவுசில் 720 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிறுவனத்தின் உரிமையாளர் ஆர்.ஜே.ராம் நாராயணன் மற்றும் குழுவை சேர்ந்த தனப்பிரதன், பிரபு, மோகன்ராஜ், பாரதி, குலாப், ராதிகா, சக்கு உபைது, வஜ்ஜி ஆகியோர் இந்த அன்னதானத்தை வழங்கினார்கள். முன்னதாக அவர்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர தின உணர்வை ஏற்படுத்தும் வகையில் மிக பிரமாண்டமான விழாவை புதுவையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் இந்த குழுவினர் நடத்த உள்ளனர்.

துப்புரவு தொழிலாளர்கள்

ஏம்பலம் தொகுதி கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த என்.ஆர்.முருகன் வில்லியனூர் பகுதியில் உள்ள துப்புரவு தொழிலாளர்களுக்கு அன்னதானம் வழங்கினார். என்.ஆர்.காங்கிரஸ் மேலிட பிரதிநிதி டி.என்.கோபி முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

கற்பக விநாயகர் கள் மற்றும் சாராயக்கடை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் புதுவை ராஜீவ்காந்தி குழந்தைகள் ஆஸ்பத்திரி எதிரில் அன்னதானம் வழங்கப்பட்டது. அதனை முன்னாள் வாரிய தலைவர் பாலமுருகன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மோகன்தாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story