ஆசிரியரிடம் செல்போன் திருட்டு


ஆசிரியரிடம் செல்போன் திருட்டு
x

புதுவையில் பஸ்சில் சீட் பிடிக்க போட்ட பை திருடு போனது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி

வில்லியனூர் தூய லூர்து அன்னை தேவாலயத்தின் ஆண்டு பெருவிழாவை காண சென்னையை சேர்ந்த ஒரு ஆசிரியர் தனது குடுபத்தாருடன் புதுச்சேரிக்கு நேற்று வந்தார். அவர் தேவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு மீண்டும் சென்னைக்கு செல்ல புதுச்சேரி பஸ் நிலையத்திற்கு வந்தார். ரம்ஜான் மற்றும் வாரஇறுதி நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் புதுவைக்கு வந்த சுற்றுலா பயணிகள் மீண்டும் சொந்த ஊருக்கு செல்ல புறப்பட்டதால் பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.

இந்தநிலையில் சென்னை செல்லும் பஸ்சில் ஏறுவதற்கு பயணிகள் முண்டியத்ததால் ஆசிரியர் பஸ்சில் 'சீட்' பிடிப்பதற்காக தனது பையை ஒரு 'சீட்'டில் போட்டார். பின்னர் படிக்கட்டு வழியாக ஏறி அவர் பஸ்சில் உள்ளே சென்று பார்த்தபோது சீட் பிடிக்க போட்ட பை மாயமாகி இருந்தது. அதனை மர்ம நபர்கள் யாரோ திருடிச்சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்த பையில் விலை உயர்ந்த செல்போன், ஏ.டி.எம். கார்டு, முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவை இருந்ததாக தெரிகிறது. இது குறித்த அவர் அளித்த புகாரின்பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story