பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

புதுவை சாரம் முத்து விநாயகா் தோப்பு பகுதியில் குடியிருப்பை காலி செய்ய மறுத்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
புதுச்சேரி
புதுவை சாரம் முத்து விநாயகர் தோப்பு பகுதியில் 40 குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகிறது. இந்த இடம் தொடர்பான வழக்கில் சமீபத்தில் தனியார் ஒருவருக்கு சொந்தமானது என்று கோர்ட்டில் தீர்ப்பு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர் அங்கு குடியிருப்பவர்களை காலி செய்யுமாறு கூறியுள்ளார். இதுதொடர்பாக பிரச்சினைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அங்கு குடியிருப்பவர்களின் வீட்டை சிலர் பூட்டியதாகவும் கூறப்படுகிறது. போலீசார் வந்து பூட்டை அகற்றி அந்த குடும்பத்தினரை மீட்டனர். இந்தநிலையில் அங்கு வசிக்கும் மக்கள் தங்களுக்கு நியாயம் வழங்கக்கோரி காமராஜ் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு உருளையன்பேட்டை போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது இந்த பிரச்சினை தொடர்பாக நாளை மறுநாள் (சனிக் கிழமை) ரிச்சர்ட் எம்.எல்.ஏ. முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.






