பறவைகள், விலங்குகளின் இறைச்சி பறிமுதல்


பறவைகள், விலங்குகளின் இறைச்சி பறிமுதல்
x

ஒதியம்பட்டு நரிக்குறவர் குடியிருப்பில் வேட்டையாடிய பறவைகள், விலங்குகளின் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. வேட்டையாடியவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரி

ஒதியம்பட்டு நரிக்குறவர் குடியிருப்பில் வேட்டையாடிய பறவைகள், விலங்குகளின் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. வேட்டையாடியவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதிரடி வேட்டை

புதுவை ஒதியம்பட்டு பகுதியில் இறைச்சிக்காக பறவைகள் மற்றும் விலங்குகள் வேட்டையாடப்பட்டு வருவதாக வனத்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்தது.

இதைத்தொடர்ந்து தலைமை வன காப்பாளர் சத்தியமூர்த்தி, துணை வனகாப்பாளர் வஞ்சுளவல்லி தலைமையில் துணை இயக்குனர் குமாரவேலு, வேளாண்மை அலுவலர்கள் ராமலிங்கம், கோவிந்தன், ராஜராஜன் லூகாஸ், வேல்முருகன் மற்றும் வனத்துறையினர் அங்குள்ள நரிக்குறவர் குடியிருப்புகளில் சோதனை நடத்தினார்கள்.

ஐ.ஆர்.பி.என். போலீஸ் இ்ன்ஸ்பெக்டர் மணீஷ் தலைமையிலான குழுவினருடன் சேர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வீடு வீடாக சோதனை

வில்லியனூர் அருகே உள்ள ஒதியம்பட்டு நரிக்குறவர் குடிருப்பில் ஒரே நேரத்தில் பல்வேறு குழுவினராக பிரிந்து வீடு வீடாக சோதனை போடப்பட்டது. அப்போது ஒரு சில வீடுகளில் இருந்த ஐஸ் பெட்டிகளில் வேட்டையாடப்பட்ட கொக்கு, நாரை, கிளி, உடும்பு, ஆமை, முயல் போன்றவை பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டது.

அதாவது கொக்கு, நாரை, நீர்க்காகம், கிளி, பருந்து, ஆள் காட்டி குருவி உள்ளிட்ட 63 பறவைகள், உயிருள்ள உடும்பு, ஆமை போன்றவையும் மற்றும் மரக்கட்டையில் தயாரிக்கப்பட்ட 2 துப்பாக்கிகள், வலைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இறைச்சியும் அங்கிருந்து எடுக்கப்பட்டது. இது மான்கறிகளாக இருக்கலாம் என்று வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இந்த நடவடிக்கையின்போது அங்கிருந்தவர்களால் வனத்துறை ஊழியரான ஆறுமுகம் தாக்கப்பட்டார். அவருக்கு கையில் எலும்பு முறிவும் ஏற்பட்டது. இதற்காக அவர் சிகிச்சை பெற்றார்.

பதுக்கி வைத்தவர்கள் யார்?

இதுகுறித்து விசாரித்ததில், தமிழகம், புதுச்சேரி எல்லை பகுதியில் பறவைகள், விலங்குகளை இறைச்சிக்காக வேட்டையாடியது தெரியவந்தது. இவற்றை பதுக்கி வைத்திருந்தவர்களின் பெயர் விவரங்களை வனத்துறையினர் சேகரித்தனர். அவர்கள் மீது அடுத்தகட்டமாக கைது செய்வது குறித்து தீவிரம் காட்டி வருகின்றனர்.

மேலும் இவர்களிடம் கூகுள்பே, போன் பே மூலம் இறைச்சி வாங்கிச் சென்றவர்கள் பற்றிய விவரமும் சைபர் கிரைம் போலீசாரால் சேகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை குறித்து துணை வனகாப்பாளர் வஞ்சுளவல்லி நிருபர்களிடம் கூறியதாவது:-

மான் இறைச்சி

வனவிலங்குகளை வேட்டையாடுவது சட்டப்படி குற்றம். இதற்கு 7 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்படலாம். அதேபோல் வனவிலங்குகளை வாங்குவதும் குற்றம்தான்.

பறவைகள், வன விலங்குகளின் இறைச்சி வாங்கியவர்கள் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தியுள்ளனர். இதன் மூலம் அவர்கள் யார், யார்? என்று கண்டுபிடிக்க உள்ளோம். வனவிலங்குகளை வேட்டையாடியவர்கள் அதன் இறைச்சியை வெட்டி ஐஸ் பெட்டிகளில் சுகாதாரமற்ற முறையில் சேகரித்து வைத்துள்ளனர். அதை பார்க்கும்போது மான் இறைச்சி போல் உள்ளது. அதை ஆய்வுக்கு அனுப்ப உள்ளோம்.

10 வீடுகளில் இப்போது சோதனை நடத்தி உள்ளோம். அதன் மூலம் வனவிலங்குகளை வேட்டையாடியவர்களை கண்டறிந்துள்ளோம். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். பெரும்பாலும் ஊசுடு ஏரி பக்கத்திலேயே இவற்றை வேட்டையாடி உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story