காங்கிரசார் சாலை மறியல்


காங்கிரசார் சாலை மறியல்
x

சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதை கண்டித்து மறியலில் ஈடுபட்ட காங்கிரசார் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி

சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதை கண்டித்து மறியலில் ஈடுபட்ட காங்கிரசார் கைது செய்யப்பட்டனர்.

ஆர்ப்பாட்டம்

நேசனல் ஹெரால்டு வழக்கில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு சம்மன் அனுப்பி அமலாக்கத்துறை இன்று விசாரணை நடத்தியது. இதுதொடர்பாக மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் இந்திராகாந்தி சதுக்கத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தலைமை தாங்கினார்.

திடீர் மறியல்

முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, எம்.எல்.ஏ.க்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத், முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் துணை சபாநாயகர் எம்.என்.ஆர்.பாலன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நீல.கங்காதரன், அனந்தராமன், கார்த்திகேயன், நிர்வாகிகள் சங்கர், தனுசு, சூசைராஜ், சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பிய அவர்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு இருந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி உள்பட 300-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.

கைதான அனைவரும் கரிக்குடோனில் தங்க வைக்கப்பட்டு சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டனர். வழக்கமாக இரு பிரிவாக போராட்டம் நடத்தும் காங்கிரசார் நேற்று ஒன்றாக இணைந்து போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

போராட்டத்தை தொடர்ந்து முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

முகத்திரை கிழியும்எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கைகளில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு ஈடுபட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் பலத்தையும், மரியாதையையும் சீர்குலைக்கும் வகையில் அமலாக்கத்துறையை ஏவிவிட்டு வருகிறது.

ஆதாரம் இல்லாத ஒரு வழக்கில் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோரை அமலாக்கத்துறை விசாரிப்பது பழிவாங்கும் நடவடிக்கை ஆகும். இவர்கள் இருவரும் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்கப்படும்போது பிரதமர் மோடியின் முகத்திரை கிழியும்.

நாட்டில் பிரதமர் மோடி செய்ய வேண்டிய வேலைகள் எவ்வளவோ உள்ளது. இதில் எல்லாம் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை குறிவைத்து அதிகார பலம், பணபலம் இவற்றை பயன்படுத்தி ஆட்சி மாற்றம் ஏற்படுத்தும் முயற்சியில் பா.ஜ.க. ஈடுபட்டுள்ளது. அரிசி, தயிர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மீது வரியை சுமத்தி மக்களின் வயிற்றில் அடிக்கும் பா.ஜ.க.வின் ஆட்சி விரட்டப்படும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story