காதல் தகராறில் கொலை சதி; கத்திகளுடன் பதுங்கிய 6 பேர் கைது


காதல் தகராறில் கொலை சதி; கத்திகளுடன் பதுங்கிய 6 பேர் கைது
x

திருக்கனூர் அருகே காதல் தகராறில் வாலிபரை கொலை செய்ய கத்திகளுடன் பதுங்கி இருந்த சிறுவன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்

திருக்கனூர்

திருக்கனூர் அருகே காதல் தகராறில் வாலிபரை கொலை செய்ய கத்திகளுடன் பதுங்கி இருந்த சிறுவன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

போலீசார் ரோந்து

திருக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புனிதராஜா மற்றும் போலீசார் நேற்று விநாயகம்பட்டு பஸ் நிறுத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சோரப்பட்டு- திருவண்ணாமலை சாலையில் சந்தேகப்படும்படியாக சாலையோரம் 8 பேர் கொண்ட ஒரு கும்பல் பதுங்கி இருந்தது. அவர்களை போலீசார் சுற்றிவளைத்தனர். இதில் 6 பேர் போலீசார் பிடியில் சிக்கினர். 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

பிடிபட்டவர்களிடம் சோதனை செய்ததில் 3 கத்திகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை திருக்கனூர் போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

கொலை செய்ய சதி

விசாரணையில், அவர்கள் கூடப்பாக்கம் சுரேஷ் (வயது 18), கலித்திரம்பட்டு நவீன் (19), கார்த்திகேயன் (19), ராம்குமார் (20), விநாயகம்பட்டு விபூஷ்ணன் (21) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

பிடிபட்ட 17 வயது சிறுவன் தமிழக பகுதியை சேர்ந்த மாணவி ஒருவரை காதலித்த நிலையில், மாணவியின் முன்னாள் காதலன் சிறுவனை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், தனது கூட்டாளிகளுடன் மாணவியின் முன்னாள் காதலனை கொலை செய்ய சதிதிட்டம் தீட்டி, ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தது தெரியவந்தது.

சிறையில் அடைப்பு

இதையடுத்து சுரேஷ் உள்பட 6 பேரையும் போலீசார் கைது செய்து, புதுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதில் வாலிபர்கள் 5 பேர் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 17 வயது சிறுவன் மட்டும் அரியாங்குப்பம் சீர்த்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டான்.

தப்பியோடிய விநாயகம்பட்டு சாரதி மற்றும் சிறுவன் ஒருவனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மாணவி ஒருவரை காதலிப்பதில் ஏற்பட்ட போட்டியில் கொலை சதி திட்டத்துடன் பதுங்கி இருந்த கும்பல் பிடிபட்டது திருக்கனூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story