மின்துறை தனியார் மயத்தை எதிர்த்து தொடர் போராட்டம்


மின்துறை தனியார் மயத்தை எதிர்த்து தொடர் போராட்டம்
x

மின்துறை தனியார் மயத்தை எதிர்த்து தொடர் போராட்டங்கள் நடத்தப்போவதாக போராட்டக்குழு அறிவித்துள்ளது.

புதுச்சேரி

மின்துறை தனியார் மயத்தை எதிர்த்து தொடர் போராட்டங்கள் நடத்தப்போவதாக போராட்டக்குழு அறிவித்துள்ளது.

புதுவை மின்துறை தனியார் மய, கார்ப்பரேசன் எதிர்ப்பு கூட்டு நடவடிக்கைக்குழு ஒருங்கிணைப்பாளர் பிரேமதாசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மின்துறை தனியார் மயம்

புதுவை மின்துறை வினியோகத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் மத்திய அரசின் முடிவுக்கு மாநில அரசு இணங்கி அதை செயல் படுத்தும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் மின்துறை பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் போராட்டக்குழு அமைத்து கடந்த பிப்ரவரி மாதம் போராடினர்.

அப்போது முதல்-அமைச்சர் மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் மின்துறை தனியார்மயம் என்பது நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது. கூட்டு நடவடிக்கை குழுவும் மேற்கண்ட அரசின் முடிவினை ஏற்றுக்கொண்டு போராட்டங்களை கைவிட்டது.

மறைமுகமாக நிறைவேற்றம்

ஆனால் மேற்கண்ட வாக்குறுதி அளிக்கப்பட்டு 3 மாதங்கள் கடந்த நிலையில் தற்போது புதுச்சேரி மின் துறையை தனியார் மயப்படுத்தும் பணிகள் மறைமுகமாக நிறைவேற்றப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதையொட்டி மின்துறை தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழு முதல்-அமைச்சர், மின்துறை அமைச்சரை சந்தித்து பேசியபோது சரியான பதில் இல்லை என்பதால் அவர்களும் புதுவை அரசின் நிலைப்பாட்டை கண்டித்து கடந்த 23-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

தொடர் போராட்டம்

இந்தநிலையில் தனியார் மயம் தொடர்பான அரசின் நிலைப்பாட்டை கண்டித்தும், அடுத்து எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முடிவெடுக்க கூட்டு நடவடிக்கை குழுவின் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல்-அமைச்சர், மின்துறை அமைச்சரை சந்தித்து தனியார்மயத்தை கைவிடக்கோரி மனு அளிப்பது, 29-ந்தேதி அண்ணா சிலை அருகே மாலைநேர தர்ணா போராட்டத்தை நடத்துவது, அதன்பின் கிராமம் மற்றும் நகரப்பகுதிகளில் ஜூன் 2-ந் தேதி முதல் 14-ந்தேதி வரை மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story