தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா


தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா
x

புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினார்கள்.

காலாப்பட்டு

புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினார்கள்.

புதுவை காலாப்பட்டில் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா புதுவை பல்கலைக்கழக கலையரங்கத்தில் இன்று நடந்தது. விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்துகொண்டு 732 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்கள்.

கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

பட்டமளிப்பு விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி சிறை சென்றவர்களால் நாம் இப்போது சுதந்திர காற்றை சுவாசிக்கிறோம். கொரோனா காலத்தில் நமக்காக பாடுபட்ட டாக்டர்களையும் போற்ற வேண்டும். தியாகிகளின் தியாகத்தை படித்தால்தான் சிந்தனை மேம்படும்.

நமது முன்னேற்றத்துக்கு திட்டமிடுதல் என்பது மிகவும் அவசியமாகும். அதேபோல் தற்கால தொழில்நுட்பத்தை கையாளுவதிலும் கவனம் தேவை. நமக்கு மகிழ்ச்சியை தரும் தொழில்நுட்பமே துன்பத்தையும் தருவதாக உள்ளது.

தற்போது தேசிய கல்விக்கொள்கை (புதிய கல்விக்கொள்கை) அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இது மாணவர்களை வகுப்பறைகளில் இருந்து உலகத்துக்கு அழைத்து செல்வதாக உள்ளது.

இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

முதல்-அமைச்சர் ரங்கசாமி

விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

நமது மாநிலத்தில் ஏழைகளும் தரமான தொழிற்கல்வி பெறும் வாய்ப்பினை அரசு ஏற்படுத்தி தந்துள்ளது. மருத்துவம், என்ஜினீயரிங் கல்வியை புதுவையில் பெறுவதைப்போல் வேறு எங்கும் பெற முடியாத நிலை உள்ளது. சிறந்த சமூகத்தை உருவாக்கும் வகையில்தான் புதுவை அரசு கல்வி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

என்ஜினீயரிங் கல்லூரியில் படித்த மாணவர்கள் வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவது அவசியமாகும். இப்போதைய நிலையில் சவால்களை எதிர்கொண்டு வெற்றிபெற வேண்டும். தொழிற்கல்வி படித்தவர்கள் ஏதாவது ஒரு அரசு வேலை கிடைத்தால்போதும் என்ற மனநிலையில் இருப்பது சரியல்ல. தொழில்நுட்ப கல்வி கற்றவர்கள் 4-ம் தர அரசு பணியில் ஊழியராக சேரக்கூடாது. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி உயர வேண்டும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசினார்.

விழாவில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், செல்வகணபதி எம்.பி., தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் மோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story