கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்


கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
x

காரைக்காலில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று நடந்தது.

காரைக்கால்

கடந்த சில வாரமாக கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக காரைக்கால் இருந்து வந்தது. ஆனால், தற்போது மீண்டும் கொரோனா தொற்று பரவத்துவங்கியுள்ளது. இந்த தொற்றை தடுக்கும் வகையில், காரைக்கால் மாவட்ட நலவழித்துறை சார்பில், இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய நலவழி மையம், துணை சுகாதார நிலையம் மற்றும் அரசு பொதுமருத்துவமனை ஆகியவற்றில் சிறப்பு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இம்முகாமில், 2-ம் தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசிகளை பலர் தாமாக முன்வந்து போட்டுக்கொண்டனர். முகாமை, மாவட்ட நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார் ஆய்வு செய்து கூறியதாவது:-

காரைக்கால் மாவட்டத்தில் ஒரு சிலருக்கு கொரோனா தொற்று பரவிவருவதற்கு காரணம், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருப்பதே ஆகும். தொற்று மேலும் பரவாமல் இருக்க, பொதுமக்களின் வீடு தேடி வந்து செவிலியர்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். ஆகையால் தடுப்பூசி செலுத்தாதவர்கள் சுகாதார பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளவேண்டும். மேலும், மூன்றாம் தவணை பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டு வருவதால், பொதுமக்கள்இதனை பயன்படுத்திகொள்ள வேண்டும். முக்கியமாக, 60 வயதுக்கு மேற்பட்டோர் மூன்றாம் தவணை பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story