3 மாதங்களுக்கு ஒருமுறை பரவும் டெங்கு காய்ச்சல்


3 மாதங்களுக்கு ஒருமுறை பரவும் டெங்கு காய்ச்சல்
x

பாகூர் பகுதியில் 3 மாதங்களுக்கு ஒரு முறை டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறையினர் அலட்சியமாக செயல்படுவதே காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பாகூர்

பாகூர் பகுதியில் 3 மாதங்களுக்கு ஒரு முறை டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறையினர் அலட்சியமாக செயல்படுவதே காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

டெங்கு காய்ச்சல்

புதுவை மாநிலத்தின் நெற்களஞ்சியமாக பாகூர் கொம்யூன் உள்ளது. இந்த கொம்யூன் பஞ்சாயத்தில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள், நகரங்கள் உள்ளன. புதுவை மாநிலத்தில் வளர்ந்து வரும் கொம்யூனாக பாகூர் கொம்யூன் உள்ளது. கொரானா தொற்றுக்குப் பிறகு, கடந்த 2022-ம் ஆண்டு முதல் பாகூர் கொம்யூனில் டெங்கு காய்ச்சல் பரவத் தொடங்கியது.

பாகூர் அருகே உள்ள கிருமாம்பாக்கத்தில் 10-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கரையாம்புத்தூர், முள்ளோடை, அரங்கனூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவியது.

தடுப்பு நடவடிக்கை

அவ்வாறு டெங்கு காய்ச்சல் பரவும் போது மட்டும் கொசு ஒழிப்பு, ஆங்காங்கே தேங்கியுள்ள நீரை அகற்றுவது, டெங்கு தொடர்பான விழிப்புணர்வுகளை மக்களிடையே கொண்டு செல்வது போன்ற பணிகளில் மட்டுமே சுகாதாரத்துறையினர் ஈடுபடுகிறார்கள்.

அது சமயம் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டுவதில்லை என்று கூறப்படுகிறது. அதனால் மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. தற்போது பாகூர் கொம்யூனுக்குட்பட்ட காட்டுக்குப்பம், கன்னியக்கோவில் பகுதியில் 10-க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் சளி, காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஆக்கப்பூர்வமான நடவடிக்கை

கடந்த 2 ஆண்டுகளாக 3 மாதத்திற்கு ஒருமுறை பாகூர் கொம்யூனில் ஏதாவது ஒரு பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இது நாள் வரையில் உயிரிழக்கவில்லை. இதனால் புதுவை அரசும், சுகாதாரத்துறையும் அலட்சியமாக இருந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

எனவே பாகூர் கொம்யூனில் பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினர் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story