மருத்துவ படிப்புகளுக்கான கல்வி கட்டணம் நிர்ணயம்


மருத்துவ படிப்புகளுக்கான கல்வி கட்டணம் நிர்ணயம்
x

புதுவையில் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கான கல்விக்கட்டணத்தை கட்டணக்குழு நிர்ணயித்துள்ளது.

புதுச்சேரி

புதுவையில் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கான கல்விக்கட்டணத்தை கட்டணக்குழு நிர்ணயித்துள்ளது.

மருத்துவ படிப்பு

புதுவையில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு விரைவில் நடைபெற உள்ளது. இந்தநிலையில் மாணவர் சேர்க்கைக்கு முன்பாக கல்விகட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று பெற்றோர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்தநிலையில் கடந்த 9-ந்தேதி கட்டணக்குழு கூட்டம், அதன் தலைவரான ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணம்மாள் தலைமையில் நடந்தது. அந்த கூட்டத்தில் இடைக்காலமாக தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கான கட்டணத்தை நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டது.

கட்டணம் நிர்ணயம்

இதன்படி இந்த கல்வியாண்டில் (2023-24) அரசு இடஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். சேரும் மாணவர்களுக்கு பிம்ஸ் மருத்துவக்கல்லூரி, மணக்குள விநாயகர் கல்லூரிகளுக்கு தலா ரூ.3 லட்சத்து 80 ஆயிரமும், ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்லூரிக்கு ரூ.3 லட்சத்து 29 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த கல்லூரிகளில் நிர்வாக இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு தலா ரூ.16 லட்சமும், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கான இடஒதுக்கீட்டிற்கு ரூ.20 லட்சமும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கு ஈஸ்ட் கோஸ்ட் கல்லூரி, ஏ.ஜி. பத்மாவதி, ராக் கல்லூரிக்கு தலா ரூ.42 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதுநிலை படிப்புகள்

மேலும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு பிம்ஸ், ஸ்ரீமணக்குள விநாயகர், ஸ்ரீவெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு மாணவர்களுக்கு தலா ரூ.7 லட்சத்து 59 ஆயிரமும், நிர்வாக இடஒதுக்கீட்டு மாணவர்களுக்கு ரூ.22 லட்சத்து 77 ஆயிரமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மருத்துவம் அல்லாத பிரிவுகளுக்கு அரசு இடஒதுக்கீட்டுக்கு ரூ.6 லட்சத்து 22 ஆயிரமும், நிர்வாக இடஒதுக்கீட்டுக்கு ரூ.12 லட்சத்து 44 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி முதுநிலை பல் மருத்துவ படிப்புகளுக்கு அரசு இடஒதுக்கீட்டிற்கு ரூ.6 லட்சத்து 22 ஆயிரமும், நிர்வாக ஒதுக்கீட்டிற்கு ரூ.14 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.


Next Story