வயிற்றுப்போக்கு, காலராவுக்கான அறிகுறி


வயிற்றுப்போக்கு, காலராவுக்கான அறிகுறி
x

காரைக்காலில் வயிற்றுப்போக்கு மற்றும் காலராவுக்கான அறிகுறியாக தெரிவதால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் கட்டுக்குள் வந்துவிடும் எனகலெக்டர் முகமது மன்சூர் தெரிவித்துள்ளார்.

காரைக்கால்

காரைக்காலில் வயிற்றுப்போக்கு மற்றும் காலராவுக்கான அறிகுறியாக தெரிவதால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் கட்டுக்குள் வந்துவிடும் எனகலெக்டர் முகமது மன்சூர் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் ஆய்வு

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி அதிகரித்து வருவதால், பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. இந்நிலையில் மாவட்ட நலவழித்துறை, பொதுப்பணித்துறை, நகராட்சி மற்றும் கொம்யூன் அதிகாரிகள் வயிற்றுப்போக்கிற்கான காரணத்தை கண்டறிந்து, தீவிர சிகிச்சை, விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு மாவட்ட கலெக்டர் முகமது மன்சூர் அறிவுறுத்தியிருந்தார்.

அதன்பேரில், காரைக்காலின் அனைத்து வீதிகளிலும் குடிநீர் குழாய்கள், தண்ணீர் தொட்டிகள் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

தொடர்ந்து கலெக்டர் முகமது மன்சூர் தலைமையில் பொதுப்பணித் துறை, நலவழித் துறை, உள்ளாட்சித் துறை உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்ட முடிவில், கலெக்டர் முகமது மன்சூர் கூறியதாவது:-

காலராவுக்கான அறிகுறி

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அரசு பொது மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் அவர்கள் சிகிச்சை பெற்று திரும்பி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் சார்பில், பொதுமக்களுக்கு விநியோகிக்கும் குடிநீர் எடுக்கும் பகுதி, குடிநீர் தொட்டிகள், குடியிருப்புகளுக்கு குடிநீர் குழாய் செல்லும் பகுதிகள் ஆய்வுசெய்யப்பட்டது. பல இடங்களில் குடிநீர் வீடுகளுக்கு கொண்டுசெல்லும் குழாய்களில் குடிநீருடன் கழிவுநீர் கலப்பது உறுதி செய்யப்பட்டது.

ஜிப்மர், பொதுப்பணித் துறை மூலம் குடிநீரை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தியதிலும், பாதிக்கப்பட்ட சிலரை நன்றாக பரிசோதித்த நிலையிலும், அது காலராவுக்கான அறிகுறி என தெரிய வந்துள்ளது.

விழிப்புணர்வு அவசியம்

இதனால் பொதுமக்கள் எந்தவித அச்சமும் கொள்ள தேவையில்லை. குடிநீரோடு கழிவுநீர் கலப்பதாக தெரியவரும் பகுதிகளில் பொதுப்பணித் துறை மூலம் சீரமைப்புப்பணிகள் நடைபெறுகின்றன. குடிநீர் எடுக்குமிடம், சேமிக்கும் தொட்டி ஆகியவற்றில் குளோரின் பவுடர் கலக்கப்படுகிறது. மாவட்ட நலவழித்துறை மூலம், கிராமப்புற செவிலியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் மூலம் வீடுவீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்த நேரத்தில், பொதுமக்கள் தண்ணீரை கொதிக்கவைத்து, சூடு ஆறியபிறகு குடிக்கவேண்டும்.

வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்று சிகிச்சை பெறவேண்டும்.மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. மேலும், தங்கள் குடியிருப்பு பகுதிகளில், சொந்த குடிநீர் குழாய், பொது குழாயில் கசிவு ஏற்பட்டால், உடனடியாக பொதுப்பணித் துறை, கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகம் குடிநீரில் மிகுந்த கவனமாக இருக்கவேண்டும். புதுச்சேரியிலிருந்து மேலும் பரிசோதனைக் குழுவினர் காரைக்காலில் ஆய்வு செய்து வருகின்றனர். இவர்களின் கருத்தும் பெறப்படும். பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் ஒரு வாரத்திற்குள் இது கட்டுக்குள் வந்துவிடும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story