பாழடைந்த புயல் பாதுகாப்பு கட்டிடம்


பாழடைந்த புயல் பாதுகாப்பு கட்டிடம்
x

பூ.புதுக்குப்பம் கிராமத்தில் பாழடைந்த புயல் பாதுகாப்பு கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரியாங்குப்பம்

பூ.புதுக்குப்பம் கிராமத்தில் பாழடைந்த புயல் பாதுகாப்பு கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புயல் பாதுகாப்பு கட்டிடம்

மணவெளி தொகுதியில் பூ.புதுக்குப்பம் மீனவர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட கட்டுமரம் மற்றும் எஞ்சின் பொருத்திய சிறிய விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடித்து தொழில் செய்து வருகின்றனர்.

புயல், கனமழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களில் இருந்து மீனவர்கள் தங்கள் கட்டுமரம் மற்றும் மீன்பிடி வலை உள்ளிட்ட உபகரணங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள மீன்வளத்துறை சார்பில் புயல் பாதுகாப்பு கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது.

ஜன்னல் கதவுகள் சேதம்

இந்த கட்டிடம் கட்டப்பட்டு 40 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால், முறையான பராமரிப்பு இன்றி பாழடைந்துபோய் உள்ளது. இந்த கட்டிடத்தில் பொருத்தப்பட்டு இருந்த மின் விளக்குகள், மின் விசிறிகள் மாயமாகியுள்ளன. ஜன்னல் கதவுகளும் மர்மநபர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த கட்டிடத்தை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மது பாராக மாற்றியுள்ளனர். இங்கு இயற்கை உபாதை கழிப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இது கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகளை முகம்சுளிக்க வைப்பதாக உள்ளது. எனவே பாழடைந்த புயல் பாதுகாப்பு கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு அதே இடத்தில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டவேண்டும் என்று அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story