மீன் பிடிப்பதற்காக வேல்ராம்பட்டு ஏரியின் நீரை வெளியேற்றுவதா?


மீன் பிடிப்பதற்காக வேல்ராம்பட்டு ஏரியின் நீரை வெளியேற்றுவதா?
x

புதுவையில் மீன் பிடிப்பதற்காக வேல்ராம்பட்டு ஏரியின் நீரை வெளியேற்றுவதை கண்டித்து மனு வழங்கப்பட்டடுள்ளது.

புதுச்சேரி

முதலியார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. சம்பத், பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி முழுவதும் பரவலாக நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகின்றது. இதனால் கடல் நீர் உட்புகுந்து குடிநீர் உப்பு நீராகி உபயோகிக்க முடியாத சூழ்நிலையாக மாறி உள்ளது. மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மாநில அரசு பலநூறு கோடி ரூபாய் செலவிட்டு கிராமப் பகுதிகளில் இருந்து குடிநீர் கொண்டு வந்து நகரப் பகுதியில் குடிநீர் பற்றாக்குறையை சமாளித்து வருகிறது.புதுச்சேரி மாநிலம் தற்போது கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. இருப்பினும் வேல்ராம்பட்டு ஏரியில் நீர் தேக்கி நிலத்தடி நீரை உயர்த்த பல நூறு கோடி ரூபாய் செலவிடுகிறது. நிலைமை இப்படி இருக்க வேல்ராம்பட்டு ஏரியில் மீன்பிடிக்க ஒப்பந்தம் எடுத்தவர், சுயலாபத்திற்காக ஏரியின் நீரை வெளியேற்றி வருகிறார். இதற்கு தங்கள் துறையே அனுமதி வழங்கி உள்ளது. மீன்பிடி ஒப்பந்ததாரருக்கு லாபம் பெருக்கும் நோக்குடன் நீரை வெளியேற்ற அனுமதி அளித்துள்ளதும் அறிவார்ந்த செயலாக இல்லை.தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் இனியும் என்னால் வேடிக்கை பார்க்க முடியாது.தங்கள் துறை மூலம் நீர் வெளியேற்ற கொடுத்த அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story