தடுப்பு கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதி என்ஜினீயர் பலி

அரியாங்குப்பம் புதிய பாலத்தில் தடுப்பு கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதி என்ஜினீயர் உயிரிழந்தார். அவரது கண்கள் தானமாக பெறப்பட்டது.
பாகூர்
சென்னை திருவொற்றியூர் காலடிபேட்டையை சேர்ந்தவர் கண்ணன். துறைமுக ஊழியர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக கடலூர் மஞ்சக்குப்பம் மிஷன் வீதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது மகன் ஹரிகரன் (வயது 24). மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துவிட்டு, தற்போது திருமண மேடை அலங்காரம் செய்யும் வேலை செய்து வந்தார்.
இன்று அதிகாலை மஞ்சக்குப்பம் துக்காராம் வீதியை சேர்ந்த நண்பர் சுந்தராஜுலு (25) என்பவருடன் ஹரிகரன் மோட்டார் சைக்கிளில் புதுச்சேரி நோக்கி சென்றார். அரியாங்குப்பம் புதிய பாலத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக தடுப்பு கட்டையில் மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், உடனே ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அவர்களை அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி ஹரிகரன் பரிதாபமாக இறந்துபோனார். சுந்தராஜுலுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே விபத்தில் இறந்த ஹரிகரனின் கண்கள், அவரது பெற்றோர் தானமாக வழங்கினர்.