கலால்-காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை

புதுவையில் கள்ளச்சாராயம் உற்பத்தி செய்யப்படுகிறதா? என போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்
புதுச்சேரி
புதுவையில் கள்ளச்சாராயம் உற்பத்தி செய்யப்படுகிறதா? என போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
புதுவையில் இருந்து கடத்தப்பட்டதா?
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பத்தில் விஷசாராயம் குடித்து 10-க்கும் மேற்பட்டவர்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மாநில எல்லை பகுதியான இங்கு புதுவை மாநிலத்தில் இருந்து தான் கடத்திக் கொண்டு வந்து சாராயம் விற்கப்பட்டதாக வெளியான தகவல் கலால் மற்றும் காவல்துறையினரை அதிர வைத்துள்ளது.
தேடுதல் வேட்டை
இதைத்தொடர்ந்து புதுவை கலால்துறை துணை ஆணையர் சுதாகர் உத்தரவின்பேரில் தாசில்தார் சிலம்பரசன், சேதராப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் நேற்று சேதராப்பட்டு, கரசூர் ஏரிக்கரை பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
யாரேனும் கள்ளச் சாராயம் உற்பத்தி செய்கிறார்களா? என்பது குறித்து புதர்களுக்குள் புகுந்து தேடினார்கள். மேலும் ஆங்காங்கே வாகன சோதனையிலும் ஈடுபட்டனர். ஆனால் இதில் எதுவும் சிக்கவில்லை.
இதுதொடர்பாக கலால்துறை துணை ஆணையர் சுதாகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தீவிர கண்காணிப்பு
புதுச்சேரியில் தமிழக மதுபானங்கள் போலியாக தயாரித்து கடத்தப்படுவதாகவும், எரிசாராயம் கடத்தப்படுவதாகவும் வந்த தகவலின்படி கலால்துறை தாசில்தார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு புதுவையில் அனைத்து பகுதிகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த தனிப்படை 4 வழக்குகளில் இதுவரை ரூ.66 லட்சத்து 33 ஆயிரத்து 960 மதிப்புள்ள 433 பெட்டி மதுபானங்களையும், 1,425 லிட்டர் எரிசாராயம் மற்றும் 3 வாகனங்களையும் கைப்பற்றி 18 குற்றவாளிகளை கைது செய்துள்ளது.
தமிழக சம்பவத்தை தொடர்ந்து புதுச்சேரி-தமிழக எல்லைப்பகுதிகளில் எரிசாராயம் மற்றும் போலி மதுபானங்கள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க கலால் தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது புதுவை கலால் விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
குண்டர் சட்டம்
அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டருக்கு பரிந்துரைக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது. தொடர்ந்து சோதனைகள் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.