மளிகை கடையில் போலி ஏ.டி.எம். கார்டு கொடுத்து மோசடி

திருபுவனையில் மளிகை கடையில் போலி ஏ.டி.எம். கார்டு கொடுத்து மோசடி செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
திருபுவனை
புதுவை மாநிலம் திருபுவனை அருகே மதகடிப்பட்டு பாளையத்தில் மளிகை கடை உள்ளது. இந்த கடைக்கு இன்று காலை வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் வீட்டில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு அவசரமாக சமையல் எண்ணெய் தேவைப்படுவதாக கடையில் இருந்த பெண்ணிடம் கூறினார். இதையடுத்து 3 அட்டை பெட்டிகளில் சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளை அந்த பெண் வழங்கினார்.
இதனை பெற்றுக்கொண்ட அந்த வாலிபர், தன்னிடம் பணம் இல்லை என்றும், ஏ.டி.எம். கார்டு உள்ளதாகவும், அதனை வைத்துக்கொள்ளுகள், பணத்தை வீட்டில் இருந்து எடுத்துவந்து வருவதாக கூறிவிட்டு எண்ணெய் பாக்கெட்டுகளுடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.
நீண்ட நேரமாகியும் அந்த வாலிபர் வராததால், அவர் கொடுத்த கார்டை அக்கம் பக்கத்தினரிடம் காண்பித்து விசாரித்தபோது, அது போலியான ஏ.டி.எம். கார்டு என்பது தெரியவந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அந்த பெண் அறிந்தார். நூதன முறையில் வாலிபர் ஏமாற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.