மீன்பிடி தடைக்கால நிவாரணம் நாளை வழங்கப்படும்

புதுவையில் மீன்பிடி தடைக்கால நிவாரணம் நாளை வழங்கப்படும் என்று அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்தார்.
அரியாங்குப்பம்
மீன்பிடி தடைக்கால நிவாரணம் நாளை வழங்கப்படும் என்று அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்தார்.
டீசல் பங்க்
புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் பெரிய வீராம்பட்டினம் மீனவ கிராமத்தில் டீசல் பங்க் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்பேரில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் வீராம்பட்டினம் மீனவர் கிராமத்தில் டீசல் பங்க் அமைக்கப்படுகிறது. இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சிக்கு தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கர் தலைமை தாங்கினார். அமைச்சர் லட்சுமிநாராயணன் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மீன்வளத்துறை இயக்குனர் பாலாஜி, இணை மற்றும் துணை இயக்குனர்கள், மீன்வளத்துறை அதிகாரிகள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பிரதிநிதிகள் மற்றும் வீராம்பட்டினம் கிராம பஞ்சாயத்தார்கள், மீனவர்கள் கலந்துகொண்டனர்.
தடைக்கால நிவாரணம்
நிகழ்ச்சியை தொடர்ந்து அமைச்சர் லட்சுமிநாராயணன் நிருபர்களிடம் கூறுகையில், 'இந்த டீசல் பங்க் மூலம் பெரிய வீராம்பட்டினம், சின்ன வீராம்பட்டினம் கிராம மீன்பிடி கலன் உரிமையாளர்கள் பயன்பெறுவார்கள். காலாப்பட்டு பகுதியிலும் டீசல் பங்க் விரைவில் அமைக்கப்பட உள்ளது. உயர்த்தப்பட்ட ரூ.6,500 மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை நாளை (புதன்கிழமை) வழங்கப்படும்' என்றார்.
இந்த தொகையை புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளை சேர்ந்த 18 ஆயிரத்து 298 மீனவர்கள் பெறுகிறார்கள்.