லாரிகளை வாடகைக்கு எடுத்துச் சென்று மோசடி

புதுவையில் லாரிகளை வாடகைக்கு எடுத்துச் சென்று மோசடி செய்ததாக ஆரணியை சேர்ந்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி
லாரிகளை வாடகைக்கு எடுத்துச் சென்று மோசடி செய்ததாக ஆரணியை சேர்ந்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
லாரிகளை விற்க பேச்சு
புதுவை குண்டுபாளையம் நவசக்தி நகர் முதல் மெயின்ரோட்டை சேர்ந்தவர் திலகவதி (வயது 49). இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் அவருக்கு சொந்தமான லாரிகளை விற்க முடிவு செய்தார்.
இதுதொடர்பாக திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மொரப்பந்தாங்கல் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கேசவன் (வயது 48) என்பவர் திலகவதியுடன் அறிமுகமானார்.
இதைத்தொடர்ந்து அவர் விற்க முன் வந்த லாரிகளை வாங்குவது குறித்து விலை பேசப்பட்டது. அதன்படி திலகவதியிடம் இருந்த லாரிகளுக்கு ரூ.42 லட்சத்து 75 ஆயிரம் விலை முடிவு செய்யப்பட்டது.
இதை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ரூ.1 லட்சத்தை முன்பணமாக கேசவன் திலகவதியிடம் கொடுத்துள்ளார். மீதமுள்ள தொகையை 3 மாதத்துக்குள் தருவதாக அவகாசம் கேட்டு இருந்தார்.
வாடகை தராமல் மோசடி
ஆனால் பேசியபடி கேசவனால் பணத்தை கொடுக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து லாரிகளை மாத வாடகைக்கு தருமாறு கேசவன் கேட்டுள்ளார். அதன்படி தலா ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வீதம் மாத வாடகை பேசி 4 லாரிகளை கேசவன் எடுத்துச் சென்றுள்ளார்.
ஆனால் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இதுவரைநாள் வரை அவர் வாடகை எதுவும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் திலகவதி லாரிகளை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் லாரியையும் கேசவன் திருப்பி தரவில்லை என்று தெரிகிறது.
இதனால் கேசவன் தன்னை மோசடி செய்யும் நோக்கத்துடன் ஏமாற்றுவதை திலகவதி உணர்ந்தார். இதைத்தொடர்ந்து அவர் கோரிமேடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கேசவன் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் விசாரணை நடத்தி வருகிறார்.