விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்


விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்
x

விநாயகர் சதுர்த்தி விழா குறித்த ஆலோசனை கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு வம்சிதர ரெட்டி தலைமையில் நடந்தது.

புதுச்சேரி

விநாயகர் சதுர்த்தி விழா குறித்த ஆலோசனை கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு வம்சிதர ரெட்டி தலைமையில் நடந்தது.

விநாயகர் சதுர்த்தி

புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும் இந்து முன்னணி மற்றும் விநாயகர் சதுர்த்தி பேரவை சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.

இதனை முன்னிட்டு புதுவை சாரத்தில் 21 அடி உயர விநாயகர் சிலை உள்பட 150-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவது, அடுத்த மாதம் (செப்டம்பர்) 5-ந் தேதி விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று கடலில் கரைப்பது என விழாக்குழு முடிவு செய்துள்ளது.

ஆலோசனை கூட்டம்

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு வம்சிதர ரெட்டி தலைமை தாங்கினார். போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன், இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், பாபுஜி, கார்த்திகேயன் மற்றும் பொதுப்பணித்துறை, தீயணைப்பு, உள்ளாட்சி, மின்துறை, சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள், இந்து முன்னணி, விநாயகர் சதுர்த்தி பேரவை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வம்சிதர ரெட்டி பேசியதாவது:-

ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் செப்டம்பர் 4-ந் தேதி மதியம் 2 மணிக்கு சாரம் அவ்வை திடலில் இருந்து தொடங்கப்படும். ஊர்வலம் காமராஜர் சாலை, நேருவீதி, காந்திவீதி, எஸ்.வி.பட்டேல் சாலை வழியாக கடற்கரையில் முடிவடையும். அங்கு விநாயகர் சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்யப்படும். இதற்காக கடற்கரை சாலையில் பொதுப்பணித்துறை சார்பில் சாய்தளம் அமைத்து கொடுக்கப்படும்.

மேலும் கடலில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு தேவையான ராட்சத கிரேன் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்படும்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே விழாவை அமைதியான முறையில் நடத்தி முடிக்க விழாக்குழுவினர் காவல்துறைக்கும், அதிகாரிகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story