விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு


விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு
x

புதுவையில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.

புதுச்சேரி

புதுவையில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 31-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் இந்து முன்னணியினர் சார்பில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் சாரம் அவ்வை திடலில் 21 அடி உயர சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு நாள்தோறும் சிறப்பு பூஜைகளும், கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.

இதேபோல் இந்துக்கள் தங்களின் வீடுகளில் சிறிய அளவிலான களிமண் சிலைகள் வாங்கி பூஜை செய்து வழிபட்டனர். அந்த சிலைகளை கடந்த 2-ந் தேதி கடல், ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைத்தனர்.

மேள தாளம் முழங்க ஊர்வலம்

இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுவையின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் சாரம் அவ்வை திடலில் இருந்து இன்று மதியம் வாகனங்களில் மேள-தாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. பின்னர் அங்கிருந்து காமராஜர் சாலை, நேரு வீதி, காந்தி வீதி, அஜாந்தா சந்திப்பு, பட்டேல் சாலை வழியாக கடற்கரைக்கு வாகனங்களில் ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

பின்னர் கடற்கரை சாலையில் பழைய கோர்ட்டு வளாகம் அருகே விநாயகர் சிலைகள் அணிவகுத்து நின்றன. பின்னர் 2 ராட்சத கிரேன் மூலமாக விநாயகர் சிலைகள் ஒவ்வொன்றாக கடலில் இறக்கி கரைக்கப்பட்டன. பல்வேறு விதமாக விநாயகர் சிலைகள் வாகனங்களில் நீண்ட தூரத்திற்கு அணி வகுத்து நின்றது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

கடற்கரையில் குவிந்த மக்கள்

இந்த நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், சபாநாயகர் செல்வம், அமைச்சர் சாய் சரவணன்குமார், பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் மற்றும் இந்து முன்னணி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கடற்கரைக்கு வந்து இருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் விநாயகர் சிலைகளை கரைப்பதை கண்டுகளித்தனர். சிலர் தங்களது செல்போனில் விநாயகர் சிலைகளை படம் பிடித்தனர். பொதுமக்கள் கடலில் இறங்குவதை தடுக்கும் வகையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story