சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகள்


சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகள்
x
தினத்தந்தி 2 Jun 2023 2:03 PM GMT (Updated: 2 Jun 2023 2:53 PM GMT)

காரைக்காலில் சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

கோட்டுச்சேரி

காரைக்கால் பிள்ளைத் தெருவாசல் வஞ்சியாற்றின் கரையோரத்தில் குப்பைகள், கழிவுகளை கொட்டி வருகின்றனர். குறிப்பாக மருத்துவ கழிவுகளையும், இறைச்சி கழிவுகளையும் கொட்டுவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இது போதாத குறைக்கு சாராயக்கடை, மதுக்கடையில் சேகரமாகும் பிளாஸ்டிக் தம்ளர், பாட்டில்களையும் கொண்டு வந்து கொட்டுகின்றனர். அங்கு சுற்றித்திரியும் கால்நடைகள் பிளாஸ்டிக் தின்பதால் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவ்வப்போது குப்பைகளுக்கு தீ வைத்து விடுகின்றனர்.

இதனால் வெளியேறும் புகைமூட்டத்தால் ரஹ்மத் நகர், பிருந்தாவன் நகர், எச்.எம்.ஏ.நகர், கே.ஜி.நகர் பகுதி மக்கள் பெரும் சிரமத்து ஆளாகி வருகின்றனர். அடிக்கடி தீ வைப்பதால் அருகில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அலையாத்தி காடுகளும் எரிந்து நாசமாகி வருகின்றன. எனவே சாலையோரத்தில் குப்பைகள், கழிவுகள் கொட்டுவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story