ஜிப்மர் நிர்வாகம் மீது கவர்னர், முதல்-அமைச்சர் கடும் பாய்ச்சல்


ஜிப்மர் நிர்வாகம் மீது கவர்னர், முதல்-அமைச்சர் கடும் பாய்ச்சல்
x

ஜிப்மரின் கட்டண சிகிச்சை விவகாரம் தொடர்பாக நிர்வாகம் மீது கவர்னர், முதல்-அமைச்சர் கடுமையாக சாடினர். மேலும் அமைச்சர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

புதுச்சேரி

ஜிப்மரின் கட்டண சிகிச்சை விவகாரம் தொடர்பாக நிர்வாகம் மீது கவர்னர், முதல்-அமைச்சர் கடுமையாக சாடினர். மேலும் அமைச்சர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

கட்டண வசூலிப்பும், ரத்தும்

ஜிப்மரில் 63 வகையான பரிசோதனை மற்றும் சிகிச்சை களுக்கு கட்டணம் வசூலிக்க ஜிப்மர் நிர்வாகம் கடந்த மார்ச் மாதம் சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் ஜிப்மரை முற்றுகையிட்டு போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.

இதனிடையே ஜிப்மரில் ஏழைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உறுதியளித்திருந்தார். இத்தகைய சூழ்நிலையில் சேவை கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று ஜிப்மர் நிர்வாகம் விளக்கம் அளித்திருந்தது. இதனிடையே நேற்று முன்தினம் சேவை கட்டணம் தொடர்பான சுற்றறிக்கையை ஜிப்மர் நிர்வாகம் திடீரென ரத்து செய்தது.

ஆலோசனை கூட்டம்

இத்தகைய சூழ்நிலையில் ஜிப்மர் நடவடிக்கை தொடர்பாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், சந்திர பிரியங்கா, சாய்.சரவணன் குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கல்யாணசுந்தரம், தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா, சுகாதாரத்துறை செயலாளர் உதய குமார், கவர்னரின் செயலாளர் அபிஜித் விஜய் சவுத்ரி, சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு, ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் ஜிப்மர் ஆஸ்பத்திரியின் கட்டமைப்பு குறித்து இயக்குனர் ராகேஷ் அகர்வால் எடுத்துக்கூறினார். மத்திய அரசு இந்த நிதியாண்டிற்கு ரூ.1,490 கோடி வழங்கியுள்ளதாகவும், நாள்தோறும் சுமார் 5 ஆயிரம் பேருக்கு வெளிப்புற சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 2,060 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

சரமாரி கேள்வி

அதைத்தொடர்ந்து கட்டண சிகிச்சை விவகாரம் தொடர்பாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் அமைச்சர்கள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்கள். அமைச்சர் சாய்.சரவணன் குமார் பேசும்போது, கடந்த 5 வருடமாக ஜிப்மரின் பெயர் கெட்டுவிட்டது. எனது தொகுதியில் உள்ள ராமநாதபுரத்தில் உள்ள ஜிப்மர் சுகாதார நிலையத்தில் போதிய டாக்டர்கள் இல்லை. ஆம்புலன்சு இருந்தும் டாக்டர்கள் இல்லை. மருந்து மாத்திரைகள் கிடைப்பதில்லை.ஜிப்மரின் நடவடிக்கையினால் புதுவை அரசுக்கும், மத்திய அரசுக்கும் கெட்ட பெயர் வருகிறது. சாதாரண மருந்து மாத்திரைகளை கூட தனியாரிடம் சென்று வாங்க சொல்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டினார்.

அமைச்சர் நமச்சிவாயம் பேசும்போது, பரிசோதனகைள் தொடங்கும் முன்பே எதற்காக கட்டணம் தொடர்பான சுற்றறிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் எதற்காக அது நிறுத்தி வைக்கப்பட்டது?. இந்த கட்டண முறையால் ஜிப்மருக்கு எவ்வளவு வருவாய் வரும்? ஜிப்மருக்கு வருபவர்கள் எல்லாம் பணக்காரர்கள் அல்ல. பணக்காரர்கள் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றுவிடுவார்கள். ஏழை மக்கள்தான் இங்கு சிகிச்சைக்கு வருகிறார்கள். ஜிப்மருக்கு ஆண்டுக்கு ரூ.1,500 கோடியை மத்திய அரசு தருகிறது.அப்படியிருக்க கட்டணம் வசூலிக்கும் முறையில் ஓரிரண்டு கோடிதான் வருமானம் வரும். அதை மத்திய அரசிடம் ஜிப்மர் நிர்வாகம் கேட்டாலே கொடுத்துவிடும். ஆனால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது. தற்போது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சுற்றறிக்கையை நடைமுறை படுத்தப்போகிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.

முதல்-அமைச்சர் ரங்கசாமி கேள்வி

சபாநாயகர் செல்வம் பேசும்போது, அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தும்போது ஜிப்மர் நிர்வாகம் விளக்கம் அளிக்கவில்லை. ஆனால் கூட்டம் நடக்க உள்ள நிலையில் சுற்றறிக்கையை ரத்து செய்தது ஏன்? என்றார்.

முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசும்போது, ஜிப்மர் ஆஸ்பத்திரி அரசாங்கத்தினுடையதா? தனியாருடையதா? சிகிச்சைக்கு ஏன் பணம் வசூலிக்கிறீர்கள். தேவையான தொகையை மத்திய அரசிடம் கேட்டுபெறலாமே? என்றார்.

கண்காணிப்புக்குழு

கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசும்போது, கொரோனா காலகட்டத்திலேயே ஜிப்மர் மீது விமர்சனங்கள் வந்தது. ஜிப்மரில் ஏழைகளுக்கு எந்தவித கட்டணமும் கிடையாது என்பதில் உறுதியாக உள்ளோம். பரிசோதனைகளை தொடங்கும் முன்பாகவே கட்டணத்தை நிர்ணயித்தது தவறு. இந்த கூட்டம் நடக்கும் நிலையில் சுற்றறிக்கையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அனைத்து விவரங்களையும் மத்திய சுகாதாரத்துறை மந்திரிக்கு தெரிவித்து உள்ளேன். அவர் கண்காணிப்பு குழு அமைக்க கூறியுள்ளார். இந்த குழு ஆலோசித்து வழிகாட்டுதல்களை கொடுக்கும். மத்திய அரசின் இணை செயலாளரும் வந்து ஆய்வு செய்ய உள்ளார்.

ஜிப்மர் நிர்வாகம் எதிர் மறையாக செயல்படக் கூடாது. நோயாளிகளை காத்திருக்க வைக்கக்கூடாது, அவர்களுக்கு தேவையான மருந்துகளை இலவசமாக கொடுக்க வேண்டும். அதேபோல் தமிழ் மொழி தெரிந்த 5 மக்கள் தொடர்பாளர்களை பணியில் நியமிக்க வேண்டும். அவர்கள் 24 மணிநேரமும் பணியில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். தமிழ் தெரிந்தோருக்கு பணிநியமனத்தில் முன்னுரிமை அளிக்கவேண்டும்.புதிய அறிவிப்புகள் வெளியிடும் முன்பு குழுவுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். ஒரு மாதத்தில் இந்த பணிகளை முடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


Next Story